குழந்தைகளையும், சிறுவர்களையும் ஆற்றில் வீசி எறிந்த பொலிஸார்- இந்திய மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டம் ரத்தன்கரில் சிந்து ஆற்றின் கரை ஓரம் புகழ்பெற்ற சிவன் கோயில் விழாவில், ஆற்று பாலத்தில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 115 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்தில் காயமடைந்த குழந்தைகளையும், சிறுவர்களையும் பொலிஸார் ஆற்றில் வீசி எறிந்ததாக குற்றஞ்சாற்றியுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த போது பொலிஸார் மனிதாபிமானமின்றி செயல்பட்டதாக பக்தர்கள் புகார் கூறியுள்ளனர். காயம் அடைந்தவர்களை சிறிதும் இறக்கம் இல்லாமல் ஆற்றில் தள்ளிய பொலிஸார், குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசியதாக பக்தர்கள் கூறியுள்ளனர். ஆற்றில் தூக்கி வீசப்பட்ட 5 குழந்தைகளை தாம் உயிருடன் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததாக ராஜீவ் ஸ்ரீ யாதவ் என்பவர் தெரிவித்துள்ளார்.
மற்ற குழந்தைகளின் கதி என்ன என்று தெரியவில்லை என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட்ட பொலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அரசின் அலட்சியத்தால் போதுமான பொலிஸ் பாதுகாப்பு இல்லாததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் செய்யப்படாததுமே இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது. சம்பவத்துக்கு பொறுப்பேற்று பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசின் பரிந்துரையின்கீழ் தாட்டியா மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நேற்றிரவு பணியிடை நீக்கம் செய்தது. 2006 ஆம் ஆண்டில் இதே இடத்தில் பக்தர்கள் கூடியபோது சிந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 56 பக்தர்கள் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பின்னரே, ஆற்றை கடக்க வசதியாக பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த பாலத்திலேயே நெரிசல் ஏற்பட்டு 115 உயிர்கள் பலியான கொடுமை தற்போது நிகழ்ந்துள்ளது.
0 comments :
Post a Comment