Tuesday, October 22, 2013

நாங்கள் கருவேப்பிலையா? தமிழரசுக் கட்சியை போட்டுத் தாக்கும் ஈபிஆர்எல்எப் சிவசக்தி ஆனந்தன்

வடமாகாண சபையின் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் சபை அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழரசுக் கட்சியின் தலைமை எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சிதைக்கப்படுவதுடன், மக்கள் மத்தியிலும் குழப்ப நிலை உருவாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஷஷவடமாகாண சபையில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றியை எவ்வாறு தமிழரசுக் கட்சியின் வெற்றியாக மாற்றுவது என்பதும், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியை முன்னேற்றுவதற்கு இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையே தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சிந்தித்துச் செயற்படுகின்றார்கள்|| எனவும் சிவசத்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வட மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கான பொது வேட்பாளராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயர் பிரேரிக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக வந்து கோரிக்கை முன்வைத்தால் அந்தப் பதவிக்கு போட்டியிட முன்வருவேன் என்று கூறியிருந்தார். அதன்படி கூட்டமைப்பிலுள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து கோரிக்கை விடுத்த நிலையிலேயே அவர் முதலமைச்சர் பதவிக்கு கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்வந்தார்.

ஆனால், இன்று தமிழரசுக் கட்சியின் சார்பில் செயற்படும் ஒருவராகவே அவரது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் வெளிப்படுத்திய பல கருத்துக்களும்; குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக தமிழக மாணவர்கள், அரசியல் தலைவர்களின் போராட்டங்கள் பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து வவுனியாவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோதும் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜயாவிற்கு தெரியப்படுத்தியிருந்தோம். திரு. விக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இவை குறித்து அவருக்குச் சொல்ல வேண்டும் என சம்பந்தன் ஜயாவிடம் அப்போது கேட்டுக்கொண்டோம். தேர்தலின் பின்னர் 3 விடயங்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டன.

1. போனஸ் ஆசனத்தை யாருக்குக்கொடுப்பது என்பது. 2. மாகாண சபை அமைச்சர் பதவிகளை எவ்வாறு பகிர்வது என்பது. 3. முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் தொடர்பான சர்ச்சை.

இதில் முதலாவது விடயம் யாழில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டே தீர்க்கப்பட்டது. அமைச்சர் பதவிகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதில் இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டது.

அதாவது, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொதுவாக இருப்பதால் ஏனைய 4 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு அமைச்சரை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதனை நான்கு கட்சிகளுக்கும் வழங்குவதற்கும் இணக்கம் ஏற்பட்டது. நான்கு கட்சிகளுக்கும் யாரை நியமிப்பது என்பதையும் அந்தக் கட்சிகளே தீர்மானிப்பது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானித்தோம்.

ஆனால், அந்த இணக்கப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சித் தலைமை முடிவுகளை எடுத்ததுடன் மட்டுமன்றி கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாகச் செயற்பட்டது. சிறுபான்மையினக் கட்சிகளுக்குள் ஆட்களைப் பிடித்து ஜனாதிபதி எவ்வாறு அவற்றை பலவீனப்படுத்தினாரோ அதே போல தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளைப் பலவீனப்படுத்தும் வகையில் இந்த நிலைமைகளைக் கையாண்டது.

முதலமைச்சர்தான் இந்த முடிவுகளை எடுத்தார் எனவும் சொல்ல முடியாது. ஏனெனில் தமிழரசுக் கட்சி அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து தமது உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அதற்கு ஏற்றவாறுதான் இறுதியில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆயுதப் போராட்டத்துக்குள்ளால் வந்த கட்சிகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை தேர்தல் காலத்தில்கூட தமிழரசுக் கட்சி முன்னெடுத்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் தேர்தல் முடிவடைந்த பின்னரும் தமது செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி மேற்கொள்கின்றது.

தேர்தலுக்கு முன்னதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுடன் பேசும்போது கிழக்கு மாகாணத் தேர்தலின் போது இடம்பெற்ற குழறுபடிகள் போல வடக்கில் இடம்பெறாது தவிர்க்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியிருந்தோம். கிழக்கு மாகாணத்தில் கூட ஏனைய கட்சி வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சியினரால் சேறு பூசப்பட்டனர்.

கிழக்கில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எமது கட்சியைச் சேர்ந்த இரா.துரைரெட்ணம். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்மந்தன் ஜயா அவர்களின் வேண்டுகோளின் பேரில் பெருந்தன்மையோடு கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்திருந்தோம். ஆனால், இரா.துரைரெட்ணம் மூன்று தடவைகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளில் உறுப்பினராக இருந்த அனுபவத்தைக் கொண்டவர்.தற்போது வடமாகாண சபையில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு பதவிகள் எனக் கூறுபவர்கள் கிழக்கில் நடந்துகொண்டது இவ்வாறுதான்.

கடந்த 13 வருடங்களாக கூட்டமைப்பின் பெயரால் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் தமிழரசுக் கட்சித் தலைமையால் எடுக்கப்பட்ட முடிவுதான். ஜனநாயகம் அங்கு இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்கவில்லை. உதாரணமாக கூட்டமைப்பை ஒரு பதிவு செய்த கட்சியாக மாற்றவில்லை. இதனை நாம் நீண்டகாலமாக வலியுறுத்துகின்றோம். ஆனால், இதனை தமிழரசு கட்சித் தலைமை தொடர்ந்தும் நிராகரித்தே வருகின்றது. இவ்வாறு ஒரு கட்சியாகப் பதிவு செய்து ஜனநாயக முறைப்படி செயற்படத் தொடங்கினால் தமது முடிவுகளை அங்கு திணிக்க முடியாது என்பதே இதற்கான பிரதான காரணம்.

வடமாகாண சபையில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றியை எவ்வாறு தமிழரசுக் கட்சியின் வெற்றியாக மாற்றுவது என்பதும், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியை முன்னேற்றுவதற்கு இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையுமே இவர்கள் சிந்தித்துச் செயற்படுகின்றார்கள். இன்று கூட்டமைப்புக்குள் இடம்பெறும் முரண்பாடுகளுக்கு அதுதான் அடிப்படைக் காரணம். அதாவது, ஆயுதப் போராட்டத்துக்குள்ளால் வந்தவர்களை ஓரங்கட்டி தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளே இந்த முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இன்று மூன்றாம் கட்டப்போர், இராஜதந்திரப் போர் என கூறிக்கொண்டாலும் அதற்கான அடிப்படையைக் கொடுத்தது அனைத்துப் போராளிகள் பொதுமக்களினது தியாகம்தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த அடிப்படையையே தகர்க்கும் வகையில்தான் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பின் உயர் சபை ஒன்று அனைத்துப் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது. இந்த சபை தேர்தல் முடிந்த பின்னர் கூட கூட்டப்படவில்லை. இன்று மாகாண சபையின் முதலாவது அமர்வு நடைபெறவிருக்கும் நிலையில் முதலமைச்சர் கொள்கைப் பிரகடன உரை ஒன்றை நிகழ்த்த வேண்டும். அந்த உரையைத் தயாரிப்பதற்கு முன்னர் கூட்டமைப்பின் உயர் சபை கூட்டப்படவேண்டும்.

கூட்டமைப்பின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் குறித்து இந்த சபையிலேயே பேசித் தீர்க்க வேண்டும்.

தந்தை செல்வா தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய பின்னர் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தாமல் ஏனைய கட்சிகளையும் அரவணைத்துச் செயற்பட்டார். அதேபோல கூட்டமைப்பின் தலைவராகவுள்ள சம்பந்தன் ஜயா செயற்படுவார் என்றே நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறான ஒரு முதிர்ச்சியுடன் அவர் செயற்படவில்லை. பங்காளிக் கட்சிகளுக்குள் இன்று உருவாகியுள்ள குழப்பங்களுக்கு தலைவர் என்ற முறையில் சம்பந்தன் ஜயாவே காரணம்.

தேர்தல் முடிவடையும் வரை கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பற்றி பேசியவர்கள் இன்று தமிழரசுக் கட்சியின் முதன்மையைப் பற்றியே பேசுகின்றார்கள். அவர்கள் எம்மை கருவேப்பிலையாகப் பயன்படுத்த முற்படுவதைத்தான் இது காட்டுகின்றது. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை எட்ட நாம் நீண்ட தூரம் ஜக்கியத்துடன் பயணிக்க வேண்டியள்ளது.

எனவே, கட்சி நலன்களைக் கைவிட்டு மக்கள் நலன்களை முன்னிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான சட்டரீதியான கட்சியாக மாற்றி ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் செயற்படுமாறு கூட்டமைப்பின் தலைவரை இந்த நேரத்தில் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

என சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

2 comments :

Anonymous ,  October 22, 2013 at 3:17 PM  

எங்கள் நீதிமான் முதலமைச்சர் எப்போதும் நல்ல சிந்தனை தெளிவுள்ள முடிவுகளை எடுப்பவர். அவருக்கு இணையாக சம்பந்தன் ஐயாவையும் குறிப்பிடலாம்.
அவர்களின் வழிகாட்டலில் போகவே இன்றைய தமிழினம் விரும்புகின்றார்கள்.

தமிழ் கூட்டணியிலுள்ள கோமாளிகள், கிரிமினல்கள், தங்களின் சுயநலன்களுக்காக பாசிச புலிகள் பாணியிலான அறிவற்ற, அடாவடித்தனமான நடவடிக்கைள் மூலம் அமைதிக்கு பங்கம் விளைவித்து மீண்டுமொருமுறை தமிழ் மக்களுக்கு அழிவை தேடுவது மட்டுமல்ல அதில் தங்களுக்கு மேலும் இலாபங்களை தேடலாம் என நினைக்கிறார்கள் என்பதை இன்றைய மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

எனவே, இனிமேலாவது அவர்கள் சுயநலத்தையும், குறுகிய மனப்பான்மையையும் விட்டு, தாங்களாகவே உணர்ந்து திருந்த முன்வர வேண்டும்.

கரன் ,  October 22, 2013 at 8:06 PM  

நேற்றுவரை கறிவேப்பிலை இன்றிலிருந்து அதுக்கும் லாய்கில்லை.

உங்கள் சேவை போதும் சென்றுவாருங்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com