ஈரானில் மரணதன்டனை நிறைவேற்றப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர் உயிர்பிழைத்துள்ளதால் அவரை மீண்டும் தூக்கிலிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஈரானில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் அலிரெசா (37) என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை யடுத்து கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலை அவருக்கு போஜ்னர்ட் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நேரம் குறிக்கப்பட்டது.
சுருக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிய பிறகு காலுக்கு கீழே இருந்த மரக்கதவு வாய் பிளந்துக்கொள்ள 12 நிமிடங்கள் துடிதுடித்து அடங்கிப்போன அலிரெசாவின் உடலை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்ட அந்த உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப் பதற்காக மூட்டை கட்டும் பணியில் இருந்த சவக்கிடங்கு ஊழியர் அலிரெசாவின் உடலில் சிறு அசைவுகள் தென்பட்டதை கவனித்தார்.
இதனையடுத்து, சிறை அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. உடனடியாக போஜ்னர்ட் இமாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமாக உள்ளதை அறிந்து உறவினர்கள் ஆனந்தத்தில் திளைக்கின்றனர். ஆனால், அவர் முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் தூக்கிலிட்டு கொல்ல அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
சர்வதேச சட்டங்களின்படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு நபர் உயிர் பிழைத்து விட்டால் அவரது குற்றத்தை மன்னித்து விடுதலை செய்து விடுவது தான் மரபாக உள்ளது. இதற்காகவே மரண தண்டனை கைதிகளின் உடல்நிலை, தூக்கிலிடும் கயிறு உள்பட பல்வேறு அம்சங்கள் ஒன்றிற்கு இருமுறை சிறை அதிகாரிகளால் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது.
இந்நிலையில், அலிரெசாவுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ´அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மரணத்தில் இருந்து தப்பிவிட்டாலும் மீண்டும் அந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்´ என்று பேட்டியளித்துள்ளார். மீண்டும் அவரை தூக்கிலிடும் அரசின் முடிவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரானில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை 125 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment