Tuesday, October 22, 2013

கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்பளித்தது வவுனியா மேல் நீதிமன்றம்

கொலை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த சுமதி என்பவரை கொலை செய்த குற்றத்திற்கு குற்றவாளியாக காணப்பட்ட ரமேஸ் என்று அழைக்கப்படும் பஞ்சலிங்கம் கோகிலன் என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் தொடர்பில் விளக்கம் நடைபெற்று 2007.05.30 ஆம் திகதி அன்று வவுனியா நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து பிடிவிராந்தும் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் இன்டபோல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குற்றவாளி 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த குற்றவாளி வவுனியா மேல் நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட தண்டனை தீர்ப்பை இரத்து செய்யுமாறும் புதிதாக விளக்கத்திற்கு கட்டளையிடுமாறும் கோரி ஒரு மனுவும் சத்தியக்கடதாசியும் இணைத்திருந்தார். இந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் அரச சட்டத்தரணி நிசாந் நாகரட்ணம் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.

இதனை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் குற்றவாளி மீது ஏலவே விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை உறுதிப்படுத்தினார்

No comments:

Post a Comment