Tuesday, October 22, 2013

புதிய தொழிநுட்ப திடலாக இலங்கையை மாற்றியமைக்க முடியும்! - ஜனாதிபதி மகிந்த

ஆசியாவில் அறிவுத்துறையை கேந்திரமாக கொண்டு புதிய தொழிநுட்ப திடலாக இலங்கையை மாற்றியமைக்க முடியும் என, இலங்கையின் முதலாவது விஞ்ஞான தொழிநுட்ப பூங்கா மற்றும் நெனோ தொழில்நுட்ப மத்திய நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் ஹோமாகம, பிட்டிப்பன, மாஹேனவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப பூங்கா மற்றும் நெனோ மத்திய நிலையம் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அறிவை தேசிய முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக கருதி அதனை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கமே நடவடிக்கை எடுத்தாகவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

தனியார் துறையின் பங்களிப்புடன் இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரபல நிறுவனங்களாக மாஸ், பிரன்டிக்ஸ், டயலொக், ஹேலிஸ்,லோட்ஸ்டார், மற்றும் லங்கெம் ஆகியவற்றின் பங்களிப்பிலும் 2081.5 மில்லியன் ரூபா முதலீட்டிலும் இத் தொழில்நுட்ப பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை நெனோ தொழில்நுட்ப நிறுவனம் எதிர்காலத்தில் தமது ஆராய்ச்சி நடவடிக்கைளை இத் தொழில்நுட்ப பூங்காவின் மூலமே மேற்கொள்ளவுள்ளது. போட்டிமிக்க தொழில்நுட்ப சந்தைக்கு பொருத்தமான இயற்கை மூலப்பொருட்களுடன் நெனோ தொழில்நுட்பத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். விவசாயம், சுகாதாரம், நீர் சுத்திகரிப்பு, உள்ளிட்ட துறைகளின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு நெனோ தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வுகளை காண்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

விஞ்ஞான மற்றும் ஆய்வு கூடங்கள் பலவற்றை கொண்டுள்ள நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தில் 80 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன இலத்திரனியல் உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் இப்பூங்காவின் பிரதான கட்டிடம் நவீன கட்டிட கலைக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஹோமாகமையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலை மற்றும் பாடபுத்தக களஞ்சியம் அமைந்துள்ள வனப்புமிக்க பிரதேசத்தில் நெனோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் தாரா விஜேதிலக, நெனோ தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் கலாந்தி மகேஸ் எமலின், பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் ஹரேன் விஜேரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment