மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகு தாவூத் அவர்களின் பயணம் மேற்கொண்ட வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பயணித்த ஜீப் வண்டி 15 ஆம் திகதி இரவு பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் கதுறுவெல கல்லெல்ல பிரதேச பாதையில் வழிதவறி கம்பி வேலியொன்றில் மோதியமை காரணமாக, அந்த வாகனத்தில் பயணித்த பெண்ணொருவரும் பொலிஸார் இருவரும் உட்பட நால்வர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
காயப்பட்டவர்கள் நால்வரும் சிகிச்சைக்காக பொலன்னறுவை பெரியாஸ்பத்திரிக்கு அநுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயப்பட்டவர்கள் எவ்விதக் கவலைக்கிடமான நிலையிலும் இல்லை என பெரியாஸ்பத்திரியின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
ஜீப் வாகனமானது கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஜீப் வண்டி பாதையிலிருந்து விலகி மிருக வள அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான மிருக வளர்ப்பிடத்தின் 7 கொங்கிரிட் தூண்களை உடைத்துக்கொண்டு 40 மீட்டர் அளவு தூரத்தில் வீசியெறியப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாரதிக்கு நித்திரை சென்றமையினால்தான் இவ்வாறு நடந்ததா என விசாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விபத்திற்குள்ளாகிய ஜீப் வண்டிக்கு நிறையவே சேதம் ஏற்பட்டுள்ளது.
பொலன்னறுவை சிரேட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத் குமார ஜோசப்பின் ஆலோசனையின்கீழ் பொலன்னறுவை தலைமைப் பொலிஸ் பரீட்சகர் சதிஸ் கமகேவின் கீழ் வாகனப் பொலிஸ் பொறுப்பாளர் கே.பீ.டப்ளியூ. பிரேமலால், உப பொலிஸ் அத்தியட்சகர் சமன்த ரத்நாயக்க ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கருணாரத்ன கமகே)
No comments:
Post a Comment