முதலாம் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குதற்கு அதிபர்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது!
கல்வியமைச்சு மூலம் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு தரம் இரண்டு முதல் தரம் 11 வரை மாணவர்களை உள்வாங்கும் அதிகாரத்தை குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் அதுபற்றி அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பின் அமைச்சரவையின் அநுமதியைப் பெற்றதன்பின்னர், 2 ஆம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான புதிய சுற்றுநிரூபம் ஒன்று அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் வழங்குவதற்கு கல்வியமைச்சு ஆவன செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கல்வியமைச்சினால் வழங்கப்படும் சுற்றுநிரூபத்திற்கேற்பவே, அரச பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்கள் அநுமதிக்கப்படுவதோடு, 06 ஆம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதானது புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கேற்பவே நடைபெறும்.
அந்த இரு தரங்களும் தவிர்ந்த, ஏனைய அனைத்துத் தரங்களுக்குமான மாணவர்களை அநுமதிப்பதற்கு அநுமதியை அதிபர்களுக்கு வழங்கும் வகையில் இந்த புதிய சுற்றுநிரூபம் அமையவுள்ளது.
மாணவர்களை அநுமதிக்கும்போது, சலுகைகள் மற்றும் சேவைக்கட்டணம், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு அநுமதித்த கட்டணம் தவிர வேறு எவ்வகையிலும் கட்டணங்கள், பாடசாலைக்கென்று பொருட்களைப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தடை எனக்குறிப்பிட்டு இந்த புதிய சுற்றுநிரூபம் அமைந்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment