உளவு நடவடிக்கைகள் எல்லாம் வெள்ளை மாளிகையின் ஒப்புதலுடனேயே நடக்கின்றது - அமெரிக்க பத்திரிகை
நட்பு நாடுகளை உளவு பார்ப்பதற்கு வெள்ளை மாளிகையும் வெளியுறவு அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது பற்றிய புலனாய்வு செய்தி ஒன்றை 'தி லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்' வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அதிபர் ஒபாமாவுக்கு தெரியாது என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளை கோபப்படுத்தியுள்ளது.
உளவு பார்ப்பது எப்படி நடைபெறுகிறது என்கிற விவரம் தெளிவாக தெரிய வரவில்லை. வெளிநாட்டுத் தலைவர் ஒருவரின் தொலைபேசி பேச்சை கண்காணித்தால், சம்பந்தப்பட்ட அமெரிக்க தூதருக்கும் வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு மன்ற ஊழியருக்கும் அதுபற்றி அறிக்கை தருவது வழக்கம் என முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரிகள் இருவர் தெரிவித்ததாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
அரசு ரகசியம் சம்பந்தமானவை என்பதால் பெயரை வெளியிட வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் இந்த விவரங்களை இருவரும் தெரிவித்தனர். வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இமெயில் வழியாகவோ அல்லது போன் மூலமாகவோ பரிமாறிக்கொள்ளும் தகவல்களை ஒட்டுக் கேட்கும்போது ஒபாமாவுக்கு தெரிவிப்பதை தவிர்த்து, தேசிய பாதுகாபபு அமைப்பு அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம்.
உண்மையில் என்ன நடக்கிறது என்பது தேசிய பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதுநிலை அதிகாரிகளுக்கும், இதர உளவுத்துறை அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் இருவரையும் மேற்கோள்காட்டி லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தலைவர்களின் பேச்சை ஒட்டுகேட்பது தெரியாது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினால், தங்கள் வசம் உள்ள பதிவேடுகளை அவர்கள் படிப்பதில்லை என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகளுக்காக உளவு அமைப்புகள் மீது பழி சுமத்துவதை தவிர்க்கவேண்டும். சட்டரீதியாகவே இதை செய்கிறோம். உளவுத் தகவல்களை வெள்ளை மாளிகையும் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் உளவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில் இந்த உளவுப் பணிகளால்தான் ஏராளமானோர் உயிரை காப்பாற்ற முடிந்துள்ளது. அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் பாதுகாத்திட ஒட்டுகேட்பு உதவுகிறது, ஆயினும் ஒட்டுகேட்பு நடவடிக்கை காரணமாக பிற நாடுகள் கவலை அடைவதை புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றின் நியாயமான கவலைகளை அமெரிக்கா பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
அமெரிக்க மக்களையும் நட்பு நாடுகளையும் வெளிநாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்பு படைகளையும் காத்திடவுமே இந்த நடவடிக்கையை உளவுத் துறை மேற்கொள்கிறது. இந்த பணி அவசியமானதே. ஆயினும் உளவுப்பணிக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றார் கார்னி.
இதேவேளை அமெரிக்காவுக்கு நெருக்கமாக உள்ள நாடுகளின் தலைவர்களின் பேச்சை ஒட்டு கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் செனட் அவை மூத்த உறுப்பினரும் உளவுத் துறைக்கான செனட் தேர்வுக் கமிட்டியின் தலைவருமான டையான் பைன்ஸ்டைன். நட்பு நாடுகளின் தலைவர்கள் இன்டர்நெட், போன் மூலமாக நடத்தும் தகவல் பரிமாற்றத்தை ஒட்டு கேட்கின்ற தேசிய பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாம் மறு ஆய்வு செய்யவேண்டும். பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ, ஜெர்மனி ஆகிய நட்பு நாட்டுத் தலைவர்களின் பேச்சுகளை தேசிய பாதுகாப்பு அமைப்பு ஒட்டு கேட்டதை எதிர்க்கிறேன்.
ஒரு நாட்டின் மீது விரோதம் ஏற்பட்டாலோ அல்லது அத்தியாவசிய தேவை இருந்தாலோ, அப்போது மட்டுமே அந்த நாட்டின் தலைவர்களின் பேச்சை ஒட்டுகேட்கலாம் மற்றபடி நட்பு நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் போன் பேச்சை ஒ'ட்டு கேட்க என்ன அவசியம் உள்ளது. ஒருவேளை ஒட்டுகேட்க வேண்டிய நிலை வந்தால் அதிபர் ஒப்புதலை பெற வேண்டியது முக்கியம்.
2002லிருந்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் போன் பேச்சு ஒட்டு கேட்கப்பட்டது பற்றி ஒபாமாவுக்கு தெரியாது என்றே நான் நம்புகிறேன். உளவுத்துறை செயல்பாடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் தெரிவி்க்கப்படவேண்டும். உளவுத்தகவல் சேகரிப்புத் திட்டம் குறித்து தேர்வுக்குழு மறு ஆய்வு செய்யும் எனறார் பைன்ஸ்டைன்.
இதனிடையே, ஜெர்மனி பிரதமர் தொலைபேசி பேச்சு ஒட்டுக்கேட்பு மற்றும் இது சார்ந்த இதர தகவல்கள் அடங்கிய பத்திரிகை செய்திகள் தொடர்பாக விவாதிக்க அடுத்த சில வாரங்களில் அமெரிக்காவுக்கு ஜெர்மன் பிரதிநிதிகள் குழு வரவுள்ளது என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment