கிழக்கு மாகாணம் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதற்காகவே தனியாக பிரிக்கப்பட்டதாம் -அதாவுல்லா!
கிழக்கு மாகாணத்தை யாரும் செதுக்கத் தேவையில்லை எனவும், கிழக்கு மாகாணம் இயற்கையாகவே அழகானது எனவும், அழகு நிறைந்த இந்த மாகாணம் அதற்குரிய கலை, கலாசார, பாரம்பரிய விழும்பியங்களுடன் தனித்து வமாக இயங்க வேண்டும் என்பதற்காகவே கிழக்கைப் பிரிக்கக் கோரினோம் என, தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதாவுல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் யதார்த்தங்களை நிலை நிறுத்துவதற் காக குரல் கொடுத்த எங்களைப் பார்த்து இனவாதிகள் என்றும் துவேசிகள் என்றும் சிலர் வசைபாடினர். அத்தகையவர்கள் யதார்த்தத்தின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு மௌனமாகி விட்டார்கள்.
திருகோணமலை மாவட்டம் பொருளாதார வளம் நிறைந்தது. பொருளாதார விருத்திக்கு கிழக்கின் தலைசிறந்த மாவட்டமாக திருகோணமலை உள்ளது. இருப்பினும் நிர்வாகத்துக்கான மாவட்டமாக மட்டக்களப்பும் உருவாக வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதிய நிதியிருக்கவில்லை. பல்வேறு நிர்வாகச் சிக்கல்களுக்கு இம்மாகாணம் முகம் கொடுத்தது.
இன்று அவ்வாறு இல்லை. ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெயிக்கா, கொய்க்கா போன்ற நிதி உதவி வழங்கும் நிறுவனங்களினூடாக அபிவிருத்திக்காக நிதி கிடைக்கப் பெறுகிறது. அதனால் இம்மாகாணத்தை இந்நாட்டின் சிறந்த மாகாணமாக கட்டியெழுப்புவதற்கு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து நிர்வாக அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித் துள்ளார்.
0 comments :
Post a Comment