Friday, October 18, 2013

திருமலை நகரில் 'மடை' எனும் மகுடத்தில் நடைபெறவுள்ள 'பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும்,கலைஞர்களின் கொண்டாட்டமும்'

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'மடை'எனும் பெயரில் ஆற்றுகைகளாகவும், காட்சிப்படுத்தல்களாகவும், கலந்துரையாடல்களாகவும் இடம்பெறவுள்ள பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும் கலைஞர்களின் கொண்டாட்டமும் அடங்கிய நிகழ்வுகள் எதிர்வரும் 25,26,27.10.2013 வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு திருகோணமலை நகரத்தில் இடம்பெறவுள்ளது. பிரதான நிகழ்வுகள் அனைத்தும் உப்புவெளியில் உள்ள சிவானந்த தபோவனத்தில் நடைபெறும் அதேவேளை பாரம்பரிய நிகழ்த்து கலைகளின் ஆற்றுகைகள் சில உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டப வளாகத்திலும், நகரக் கடற்கரையிலும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்விற்கான எண்ணக்கரு வடிவமைப்பு கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளதுடன் இச்செயற்பாடுகள் யாவும் அவரது இணைப்பாக்கத்தில் செயற்படும் ஒழுங்கமைப்புக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையின் சகல பகுதிகளிலும் பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்கள் பல பயில் நிலையில் இருந்து வருகின்றன. பல்வகைப் பண்பாடுகளுடனும் பல்வகையான வித்தியாசங்களுடனும் இக்கலை வடிவங்கள் பயிலப்பட்டு வருகின்றன. இத்தகைய பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களின் பயில்வு என்பது மிகப் பெரும்பாலும் பேணுகையாகவன்றி வாழ்தலுக்கான பயில்வாகவே நிகழ்ந்து வருகின்றதனைக் காணமுடிகின்றது.

வருடா வருடம் ஊரவரின் மகிழ்ச்சிக்காகவும் ஊரவர் ஒன்று கூடிச் செயலாற்றுவதற்காகவும் தத்தமது ஆற்றல்களைத் திறன்களை வெளிப்படுத்தி வளர்த்தெடுப்பதற்காகவும் ஊர் கூடி நடத்தும் கலைத்திருவிழாவாக பாரம்பரிய நிகழ்த்து கலைகள் மிகப் பெரும்பாலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய வாழ்தலுக்கான பாரம்பரிய கலைப் பயில்வுகள் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் பல்வகைத் தன்மைகளில் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்கள் மத்தியில் பயிலப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்கள் பல சமூதாய கலை நிகழ்வுகளாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் எதிர் நோக்கும் நுகர்வுப்பண்பாட்டின் ஆபத்திலிருந்து எம்மை விடுவிப்பதற்கான பொறிமுறைகள் பல எம்மத்தியில் பயிலப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்த்து கலைகளின் இயங்கியலில் பின்னிப்பிணைந்துள்ளன.

இவ்வாறு தன்னளவில் முழுமையும் நிறைவும் கொண்டதாக பயிலப்படும் கலைகளில் சில அடையாளங் காணப்படாமல் உள்ள துரதிஸ்ட நிலையும் எம்மத்தியில் இருந்து வந்துள்ளது.

அதேநேரம் பொதுப் புத்தியில் பாரம்பரிய நிகழ்த்து கலைகளின் மனித வாழ்வியலுக்கான பயில்வின் இயங்கியல் பற்றிய அறிகை நோக்கு பிரதானப்படுத்தப்படாது மாறாக பேணுதலுக்கான அறிகை நோக்கே மிக முக்கியப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதாவது எமது அடையாளம், எமது பண்பாட்டின் சின்னம் அதற்காகப் பேண வேண்டும் எனுங் கருத்தியலே பிரதானப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இத்துடன் பாரம்பரிய நிகழ்த்து கலைகள் குறித்து உரையாடப்பட்ட மிகப் பெரும்பாலான உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பாரம்பரியக் கலைஞர்களின் குரல்கள் ஒலிப்பதற்கான வாய்ப்புக்கள் அமையவில்லை. இதனாலேயே வாழ்வியலுக்கான பயில்வு பற்றிய அறிகை நோக்கு வலுவற்றுப் போனதுடன் தரகு அறிஞர்களின் பேணுகைக்கான அறிகை நோக்கு பிரதானப்படுத்தப்பட்டது.

இதேவேளை இலங்கைத் தமிழ்ச் சூழலில் 2002 இலிருந்து 'கூத்து மீளுருவாக்கம்' எனுங் கோட்பாடு பாரம்பரிய நிகழ்த்து கலைகளின் வாழ்வியலுக்கான பயில்வின் இயங்கியலை ஓர் அறிகை நோக்காக முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில் இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் பாரம்பரிய நிகழ்து கலைகளின் பயில்வில் ஈடுபட்டு வருகின்ற மூத்த தலைமுறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் இளைய தலைமுறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் சில நாட்கள் ஓரிடத்தில் ஒன்றிணைந்து தத்தமக்குத் தெரிந்த வித்தைகளை மற்றையோர் முன்னிலையில் வெளிப்படுத்தி தமது கலைப்பயில்வுகளின் சாத்தியப்பாடுகள், சவால்கள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தி கலந்துரையாடி விவாதித்து பிறருக்கு கொடுக்க வேண்டிய தம் அனுபவங்களைக் கொடுத்து தாம் பிறரிடமிருந்து பெறவேண்டியதைப் பெற்று இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஆக்கபூர்வமாக இயங்குவதற்கான கருத்தியலை வலுவாக்கிக் கொள்ளும் பாரம்பரியக் கலைஞர்களின் ஊடாட்டக் களமாக இவ்விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப மலையகத்திலிருந்து காமன்கூத்தும் அதனோடு தொடர்புபட்ட கலைஞர்களும், மட்டக்களப்பிலிருந்து மகிடிக் கூத்து, தப்பிசை, பறைமேளக்கூத்தும் அதனோடிணைந்த கலைஞர்களும், கபறிஞ்ஞா நடனமும் அதனோடிணைந்த கலைஞர்களும் கூத்து அண்ணாவிமார்களும், பத்ததிச் சடங்கு, வேடுவர் சடங்கு சார்ந்த கலைஞர்களும், மன்னாரிலிருந்து வடபாங்கு, தென்பாங்கு, வாசாப்பு முதலிய ஆற்றுகைகளும் அதுசார் கலைஞர்களும், முல்லைத்தீவிலிருந்து கோவலன் கூத்தும் அதுசார் கலைஞர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து காத்தான் கூத்து, பப்பிரவாகன் கூத்தும் அதுசார் கலைஞர்களும் திருகோணமலையிலிருந்து கரகாட்டமும் அதுசார் கலைஞர்களும், அக்கரைப்பற்றிலிருந்து களிகம்பு, சிலம்பு, வாள்வீச்சு ஆற்றுகைகளும் அதுசார் கலைஞர்களும், உடப்பிலிருந்து பாரம்பரியக் கலைஞர்களும் வருகை தந்து இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

திருகோணமலையின் உப்பு வெளி எனும் இடத்திலுள்ள சிவானந்த தபோவனத்தில் 25,26,27.10.2013 வெள்ளி,சனி,ஞாயிறு தினங்களில் மு.ப 9.00 தொடக்கம் பி.ப 4.00 வரை கலந்தாய்வரங்குகளும்,காட்சிப்படுத்தல்களும் நடைபெறவுள்ளன.

25.10.2013 வெள்ளிக்கிழமையும் 26.10.2013 சனிக்கிழமையும் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரைக்கும் உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டப வளாகத்தில் மட்டக்களப்பு சந்திவெளிக் கலைஞர்களின் மகிடிக் கூத்து ஆற்றுகையும், மலையகக் கலைஞர்களின் காமன் கூத்து ஆற்றுகையும் இடம்பெறவுள்ள அதேவேளையில் நகரக் கடற்கரையில் பாரம்பரிய வாத்திய இசை, களிகம்பு,கபறிஞ்ஞா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இரவு 8.30 தொடக்கம் 11.30 வரை உப்பு வெளியிலுள்ள சிவானந்த தபோவன மைதானத்தில் மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணக் கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com