Thursday, October 10, 2013

மர்ம நபர்களால் கடத்தப்பட்ட லிபியா பிரதமர் சில மணி நேரங்களில் விடுதலை!

லிபியாவின் பிரதமரான அலி சிடான் தலைநகர் திரிபோலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இன்று அதிகாலை அவர் சில மர்மநபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.

கடந்த வாரம் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நடத்திய சோதனையில் திரிபோலியின் தெருக்களில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த அபு அனாஸ் அல் லிபி என்ற அல்கொய்தா தீவிரவாதி கைது செய்யப்பட்டார். இது போராளிகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்றும், அதன் விளைவாகவே பிரதமர் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடகம் போல் நடந்த இந்தக் கடத்தல் லிபியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரதமர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும் தலைநகர் திரிபோலிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து வேறு ஏதும் விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை என்றபோதும் லிபியாவின் ராணுவம் தலையிட்டு பிரதமரை விடுவித்துள்ளதாக அறியப்படுகின்றது.

லிபியாவின் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்த ராணுவக் கமாண்டர் ஒருவர் பிரதமர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தாக்குதல் நடத்தி ராணுவம் அவரை விடுவித்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் நிறைந்த போராட்டக் குழுக்களின் பிடியில் சிக்கியுள்ள லிபியா அரசின் பலவீனத்தையே பிரதமரின் கடத்தல் தெளிவுபடுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com