Thursday, October 17, 2013

பிக்குகளுக்கு கட்டிய ஏழடுக்கு மாடியை வழங்கி வைத்தார் மஹிந்தர்.

பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவேனாவில் புதிதாகக் கட்டப்பட்ட ஏழடுக்கு மாடி பிக்கு விடுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் 10 ம் திகதி பிக்குகள் உடைமையில் கையளிக்கப்பட்டது. பிரிவேனாவில் கற்கும் நாட்டின் பல பகுதிகளிலும இருந்து வந்துள்ள பிக்கு மாணவர்கள் இந்த விடுதியில் அமர்த்தப்படுவார்கள். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் மேற்பார்வையில் இராணுவத்தினரால் 100 நாட்களுக்குள் இந்த விடுதி கட்டப்பட்டது குறிப்பிடத் தக்கது.

ஜனாதிபதி விகாரையில் சமய அனுஷ்டானங்களை முடித்த பின்னர் அன்று பிறந்த நாளைக் கொண்டாடிய விகாரையின் தலைவரான வண. கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான மேற்படி வண. கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரர் தான் எழுதிய “அமா கங்குல நிவன் மகா” என்று நூலின் பிரதியை ஜனாதிபதியிடம் கையளித்தார். லங்காதீப செய்தியிதழின் ஊடகவியலாளர் சஞ்சீவிக சமரதுங்க எழுதிய “புதுன் துட்டு யுவதியோ” என்ற நூலும் இந் நிகழ்வில் வெளியிடப்பட்டது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக வேந்தர் வண. கலாநிதி பெல்லன்வில விமலரத்ன தேரர், வண. திவியாகல யசாசி தேரர், வண. கிரம விமலஜோதி தேரர், அமைச்சர்களான பேரா. ஜி, எல். பீரிஸ், பந்துல குணவர்தனா, விமல் வீரவன்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இராணுவத் தளபதி லெப். ஜென். தயா ரத்நாயக்க ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தனக்கு மிக நெருக்கமான தனது அன்புத் தாய் அரசி சுனேத்ராதேவியைக் கௌரவிக்கும் முகமாக அவளது மகனான கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிமபாகுவால் கி.பி. 1410 மற்றும் 1415 க்கு இடைப்பட்ட காலத்தில் பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவேனா கட்டப்பட்டது.

பெரிய போர் வீரனான மன்னன், ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் இறுதியாக இலங்கையை ஒரு குடைக் கீழ் கொண்டு வந்தவனாவான். மன்னனாக முடி சூட முன்னர் தனது தாயைப் பாதுகாப்பதற்கு தனது பெரும்பாலான முயற்சியைச் செய்துள்ளான். இலங்கையின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சின்னங்களின் ஒன்றான 600 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த பிரிவேனா பௌத்த கலாச்சாரத்துக்கு மதிப்பிட முடியாத சேவையை வழங்கியுள்ளது.

ஜனக்க அழகப்பெரும


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com