Friday, October 11, 2013

துரோகம்? துரோகம்? பதவியேற்பு வைபவத்தினை நாங்கள் ஏன் புறக்கணித்தோம்; ! விளக்குகின்றனர் பங்காளி கட்சி தலைவர்கள்!

இன்று நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங் கள் புறக்கணித்தோமே தவிர, வடமாகாணசபையினை எமது ஈ.பி.ஆர்.டில்.எப். கட்சி புறக்கணிக்கவில்லை. மாறாக, என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்தார். மாகாணசபைக்கு தெரிவு செய்யப் பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பதவியேற்பு வைப வத்தில் பங்குபற்றாமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் யாவரும் அறிவர். அதாவது எதேட்சாதிகார போக்கில் தனிப்பட்ட முடிவினை எவரும் எடுக்க முடியாது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளின் சம்மதத் திற்கிணங்கவே முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க ரீதியான, தனிப்பட்ட முடிவுகளே எட்டப்படு வருகின்றன.

தேர்தல் காலத்தில் ஒன்றாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் தந்த ஆணையினை துஸ்பிரயோகம் செய்வதை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரை மாத்திரம் உள்ளடக்கிய கட்சியல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை உணரமறுக்கிறது.

அடக்கப்பட்டிருந்த மக்களின் அபிலாஷைகளை தமது வாக்கு என்னும் ஆயுதத்தினால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வெற்றி யானது கூட்டமைப்பில் இருக்கின்ற தமிழரசுக் கட்சியினால் மாத்திரம் பெறப்பட்ட தல்ல. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன. ஆனால், அமைச்சர்களின் தெரிவில் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் சுயேட்சையாக முடிவெடுப்பதென்பது எவ்வகையில் நியாயம். நான்கு அமைச்சுக்களையும் நான்கு கட்சிகளுக்கு பிரிந்துக் கொடுங்கள் என்று நாங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்டோம். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுக்கள் வேண்டுமென சம்பந்தன் ஒற்றைக் காலில் நின்றார்.

அதுமட்டுமல்லாமல் எமது கட்சிக்கு வழங்கவேண்டிய அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட எமது உறுப்பினருக்கு வழங் கும்படி பரிந்துரைத்தோம். ஆனால், அதனையும் கூட்டமைப்பின் தலைமை நிராகரித்து, ஐங்கரநேசனை அமைச்சராக அறிவித்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - அமைச்சு ஆசைகளைக் காட்டி எதிர்க்கட்சியினரை வளைத்துப் போடுவதுபோல், கூட்டமைப்பின் தலைமையும் செயற்பட பார்க்கிறது. இது, கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

அதுமட்டுமல்லாமல், தேர்தலுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பலர் வடக்கில் இருக்கும்போது, கொழும்பிலுள்ள சிலரை ஆலோசகர்களாக உள்வாங்கவும் முதலமைச்சர் முடிவுசெய்திருக்கிறார். இதனால் வடக்கிலுள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கவுள்ளது? இங்கு கஷ்டப்பட்டவர்கள் சும்மா இருக்க, கொழும்பிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை என்றால் இதில் என்ன நியாயமிருக்கிறது?

இதுபோன்ற பல தவறுகளை கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டுவருவதை தட்டிக்கேட்கின்ற எம்மை குழப்பவாதிகளாக ஊடகங்களும் தமிழரசுக் கட்சி விஸ்வாசிகளும் சித்திரிப்பது வேடிக்கையானதே. நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம். அதற்காகத்தான் மக்கள் எம்மை ஆதரித் திருக்கிறார்கள். ஆனால், அதனை கூட்டமைப்புக்குள்ளிருக்கும் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, ஏதேச்சாதிகார போக்கில் தன்னிச்சையான முடிவுகளை கூட்டமைப்பின் தலைமை எடுக்குமேயானால், இதன் பின்விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

எமது கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நிச்சயமாக பதவிப்பிரமாணம் எடுப்பார்கள். அத்தோடு தங்களாலான அனைத்து உதவிகளையும் மக்களுக்குச் செய்வார்கள் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இது தொடர்பில் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப்பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை வடமாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 'தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்தல், உணர்வுகளை வெளிப்படுத்தல் ஆகிய வற்றிற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கை ரீதியில் ஒர் உடன்படிக்கைக்கு வந்திருந்தன.

அதாவது, நான்கு கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு அமைச்சுப் பதவியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரியை போனஸ் ஆசனம்; மூலம் அவைத் தலைவர் பதவி கொடுப்பது என்ற கோரிக்கையை நான்கு கட்சிகள் மிக வலுவாக முன்வைத்தபோது அது கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலை மாறி ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படவில்லை. இறுதியில் தமிழரசுக் கட்சி தங்களுக்கு இரண்டு ஆசனங்களையும் மற்றைய இரண்டு ஆசனங்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோவிற்கும் கொடுத்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ கட்சியால் கூறப்பட்டவர்கள் இல்லாமல் வேறு உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர்.

வடமாகாண சபையில் இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புக்களும் ஐந்து கட்சி களுக்கும் பகிரப்படுகின்ற போதுதான், கட்சிகளிடையிலான ஒற்றுமை வலுப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த குறிக்கோளை நிறைவு செய்ய முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப் பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com