Friday, October 25, 2013

காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம் என்கிறது அமெரிக்க மருத்துவ இதழ்!

தினமும் மூன்று கப் காபி அருந்துவதன் மூலம் கல்லீரல் புற்றுநோயை 50 சதவிகிதம் குறைக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது ஈரல் செல்லியல் புற்றுநோய் ஆபத்தை 40 சதவிகிதம் வரை குறைக்கக்கூடும் என்றும் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ அமைப்பின் சார்பில் வெளிவரும் அமெரிக்க மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் தோன்றும் பொதுவான புற்றுநோய்களில் கல்லீரல் புற்றுநோய் ஆறாவது இடத்தைப் பிடித்திருப்பதுடன் இறப்பிற்கான புற்றுநோய் காரணங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்றது இதிலும் ஈரல் செல்லியல் புற்றுநோய் என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் புற்றுநோயில் 90 சதவிகிதம் காணப்படுவதாகும்.

தங்களுடைய கடந்த கால ஆய்வுகள் காபி உடலுக்கு நல்லது, அதிலும் குறிப்பாக கல்லீரலுக்கு காபி நன்மையே செய்கின்றது என்று உறுதி செய்வதை ஆய்வாளரான கார்லோ லா வெக்கியா தெரிவிக்கின்றார்.

நீரிழிவு நோய் கல்லீரல் புற்றுநோய்க்கு ஒரு காரணியாக விளங்கக்கூடும் என்ற நிலையில், காபி குடிப்பது நீரிழிவு நோயைக் குறைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாக உள்ளதுமட்டுமின்றி, ஈரல் நோய் மற்றும் கல்லீரல் என்சைம்களிடையே இதனுடைய நன்மை தரும் விளைவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று கூறும் வெக்கியா, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மரியோ நெகரி ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த நோய் தொற்று அறிவியல் பிரிவில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

இதுபோன்ற முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளபோதிலும் இதற்கான நேரடித் தொடர்புகளை நிரூபிப்பது கடினமான ஒன்றாகும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஓரளவு உண்மை இருக்கக்கூடும் கல்லீரல் மற்றும் செரிமான நோய்கள் உள்ளவர்கள் தாமாக முன்வந்து காபி குடிப்பதைக் குறைப்பதுவும்கூட காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com