ரவி கருணாநாயக்கா ஆளும் கட்சிக்கு... கூட்டணியிலிருந்து மேல் மாகாண சபை வேட்பாளராக....?
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலை வரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து மேல் மாகாண சபைக்கான வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக பத்திரிகை யொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற உதயன் தமிழ்ப் பத்திரிகை இதுபற்றிக் குறிப்பிடும்போது, கொழும்பு மாவட்டத்திலிருந்து கருணாநாயக்காவுக்கு முதல மைச்சர் பதவியைப் பெற்றுக் கொடுப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அந்நிய செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்டுள்ள சட்டச்சிக்கல் உட்பட முக்கிய சில விடயங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிராக குற்றச்சாட்டுகள் இருப்பதால் இவற்றை சமாளிக்கும் நோக்கிலும் அவர் அரசு பக்கம் தாவுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. என்று செய்திவெளியிட்டுள்ள உதயன், தற்போதைய முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வழிவகை செய்துகொடுப்பதற்கான பிரேரணை முன்வைக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.
விசேடமாக கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவு முஸ்லிம்களின் வாக்குகளை ரவி கருணாநாயக்கவினால் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும் என நம்புகின்ற அரசாங்கத்தின் மு;ககிய உறுப்பினர்கள் அதனை, வட மேல் மாகாணத்தில் தயாசிரி ஜயசேக்கரவின் மூலம் வெற்றிவாகை சூடியதுபோல, வெற்றியை மேல் மாகாணத்திலும் பெற்றுக் கொள்ளவே முயல்கிறது எனவும் அப்பத்திரிகை மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
எதுஎவ்வாறாயினும் இதுதொடர்பில் உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கத் துடன் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை நாம் தொடர்புகொண்டு வினவிய வினாவுக்கு அவர் பதிலளித்தார். தான் இந்தப் பத்திரிகைச் செய்தி தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்காக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறும் சிந்தனை தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment