இது இருபத்து மூன்றாம் ஐப்பசி... (கவிதை) - எஸ். ஹமீத்
இது இருபத்து மூன்றாம் ஐப்பசி...
இன்னும் தீரவில்லை ஐயா பசி...!
இது இருபத்து மூன்றாம் ஐப்பசி...
இன்னும் மாறவில்லை ஐயா விதி!!
கைக்குழந்தையை மாரோடணைத்து
கவலைகளை மனதுக்குள் அடைத்து
கடல் கடந்த காமிலா உம்மாவின் கால்கள்
இந்த மணல் தொட்டு
இருபத்து மூன்றாண்டுகள்
இன்றோடு முடிகிறது...!
ஓர் ஒலிபெருக்கியின் வக்கிர அறிவித்தலில்
ஊரைவிட்டு விரட்டப்பட்டவள்...
துப்பாக்கிகளின் உக்கிர குறிவைத்தலில்
தனதான மண்ணை விட்டு
துரத்தப்பட்டவள்...
கழுத்துத் தங்கச் சரட்டோடு
கைக்காப்பு தோடுகளையும்
அவர்கள் கவர்ந்து கொண்டார்கள்...
கடும் உழைப்பால் சேமித்த காசையும்!
அவளின் கொல்லைப் புறத்தில்
ஆடுகளும் கோழிகளும் அனாதரவாயின..
இன்னமும்
திரும்பியிருக்கவில்லை
மேய்ச்சலுக்குப் போன மாடுகள்...!
முற்றத்தின் ஓரத்தில் அவள் வளர்த்த
முருங்கை மரங்கள் காய்த்திருந்தன...
காய்களைப் பறிக்கக்
காமிலாவுக்கு நேரமிருக்கவில்லை;
முற்றிச் சிவந்த பப்பாசிப் பழத்தையும்!
மல்லிகையும் மணிவாழையும்
பூத்திருந்தன...வரும்வரை
வாடாதிருக்க- ஒரு
வாளித் தண்ணீருக்கும் அவகாசமில்லை...!
பாரிசவாததில் படுத்துவிட்ட வாப்பாவையும்
அவருக்கு
பணிவிடை செய்தே களைத்துவிட்ட உம்மாவையும்
காலைப் படகொன்றில் அனுப்பியிருந்தாள்...
விசாரணைக்கெனச் சென்ற கணவன்
வீடு வருவானென
மூன்று மாதங்கள் முன்னாலவள்
காத்திருந்த கணங்களில் அந்தக்
கரியமிலச் செய்தி வந்தது...
'கம்பத்தில் அவள் கணவன்
தலை தொங்க மைய்யித்'தென...!
இத்தா முடிய இன்னும் நாட்களுள்ளன...
எந்த பத்வாவையையும்
ஏற்கும் நிலையிலவள்...
இந்து சமுத்திர முதுகேறி
இறங்கினாள் புத்தளத்தில்...!
அபலையாய்...அனாதையாய்...அகதியாய்...!
இப்போது காமிலாவின் மகளுக்கு
இருபத்து நான்கு வயது...
சங்கங்கள் தோன்றின...
இயக்கங்கள் எழுந்தன...
ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன....
ஊர்க் கூட்டங்கள் நடந்தன....
அறிக்கைகள் குவிந்தன...
அகிலமும் பறந்தன...
ஆட்சிக் கதிரைகள் மாறின...
அமைச்சுப் பதவிகள் கிடைத்தன...
ஆனால்....
காமிலாவும் மகளும்
காலைக் கக்கூசுக்கு
வரிசையில் வாளியுடன்
இன்னமும்....!
இது இருபத்து மூன்றாம் ஐப்பசி..
இன்னும் தீரவில்லை ஐயா பசி...!
இது இருபத்து மூன்றாம் ஐப்பசி...
இன்னும் மாறவில்லை ஐயா விதி!!
0 comments :
Post a Comment