யாழ். தேவி ரயிலில் சிக்கி தாயும் மகளும் பலி! சம்பவத்திற்கான காரணம் என்ன?
நேற்றுப் பிற்பகல் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த யாழ். தேவி ரயிலுடன் மோதி தாயும் மகளும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மகள் உயிர் தப்பியுள்ளார்.
வெயங்கொட, கீனவல பிரதேசத்தில்; இடம்பெற்ற இந்த கோர விபத்துச் சம்பவத்தில் மீடியாகம பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வயதுடைய தாயும் மூன்று வயதுடைய சிறுமியுமே பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதுடன் அவரது எட்டு வயதுடைய மற்றுமொரு மகள் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இளம் வயது தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வெயங்கொட மற்றும் பல்லேபொல ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட கீனவல பிரதேசத்திலுள்ள ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்துள்ளார்.
இதன் போது கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த யாழ். தேவி ரயிலில் எதிர்பாராத விதமாக திடீரென பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
எனினும் ரயிலில் பாய்வதற்கு முன்னர் தனது 8 வயதுடைய பெண் பிள்ளையை தண்டவாளத்திலிருந்து அந்த தாய் வெளியில் தள்ளியது போன்று விளங்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த சிறுமி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது மூன்று வயது மகள் படுகாயமடைந்த நிலையில் வந்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவராத நிலையில் வெயங்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment