திங்கட்கிழமை காலை ( 07-10-2013 ) இலங்கை ஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், பதவிப் பிரமாணத்தின் பின்னர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களைப் பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாதது, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பலத்த விசனங்களையும் விமர்சனங்களையும் தோற்றுவிக்கலாம் என்ற அச்சத்துடனேயே எனது இந்த ஆக்கத்தினைப் பதிவு செய்கிறேன்.
வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கோரி நின்றவர்-முஸ்லிம் இயக்கமொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டவர்-முஸ்லிம் ஒருவரைத் தமது கட்சியினூடாகத் தேர்தல் களத்தில் இறக்கிப் பிரசாரங்களை மேற்கொண்டவர்- அந்த முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் ஆசனம் வழங்கி அழகு பார்த்தவர்- தனது பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு முஸ்லிம்களை மறந்து விட்டமை வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
'பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்றொரு பழமொழி இருக்கிறது. உண்மையாகவே முஸ்லிம்களைப் பற்றிய அக்கறையும் கரிசனையும் அவரது உள்ளத்தில் இருந்திருந்தால், நிச்சயம் அவரது பதவிப் பிரமாணத்தின் பின்னரான அறிக்கையில் அது வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விக்னேஸ்வரன் முஸ்லிம் மக்களை ஏமாற்றி விட்டார்.
குறைந்த பட்சம் தனக்கு ஓரளவாவது வாக்களித்த வட மாகாண முஸ்லிம் மக்களைப் பற்றியாவது தனது அறிக்கையில் ஒரு வார்த்தை பிரஸ்தாபித்திருக்கலாம். அது கூட இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது வட மாகாண முஸ்லிம்களைப் பற்றிய அவரது மாற்றாந்தாய் மனப்பான்மைக்குச் சான்று பகர்வதாக உள்ளது.
அவரது அறிக்கையைப் படிக்கும் எவருக்கும் இலங்கையில் முஸ்லிம்கள் என்றொரு தனியான இனம் இல்லையோ என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாமற் போய்விடும்.
''...எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக!''
இந்த வரிகள் இலங்கையில் இரு இனங்கள்தான் இருக்கின்றன என்ற தோற்றப்பாட்டையும் அந்த இரு இனங்களும் ஒற்றுமைப்பட வேண்டுமென்ற செய்தியையும் தெளிவாகக் கூறி நிற்கிறது. அப்படியானால், முஸ்லிம்கள் என்றொரு தனியான இனம் இருப்பதாகவே விக்னேஸ்வரன் கருதவில்லையா...? அதுவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த மூன்று தசாப்த காலத்தில் எண்ணற்ற துன்பங்களையும் இழப்புகளையும் சந்தித்து, நலிந்து போயிருக்கும் முஸ்லிம்கள் என்றொரு இனம் இருப்பதை விக்னேஸ்வரன் மறந்து விட்டாரா...? அல்லது மறுதலிக்கிறாரா...? அல்லது, 'சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இருப்போம்; முஸ்லிம்களைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை' என்று சொல்லாமற் சொல்லுகிறாரா...?
அறிவாற்றலும் அனுபவ முதிர்வும் நிறையப் பெற்ற- உயர் நீதிமன்றத்தை ஆட்சி செய்த-தெளிவான சிந்தனைகளுக்குரியவர் எனப் பெயர் பெற்ற ஒருவரின் அறிக்கை எந்தளவுக்குக் கவனமாகத் தயார்படுத்தப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. 'மறதியாக விடுபட்டிருக்கும்' என்ற சால்ஜாப்புகள் முன்வைக்கப்படுமானால், அது விக்னேஸ்வரனின் ஆளுமைக்கு இழுக்காகிவிடும்.
சிங்களத் தலைவர்களோ, முஸ்லிம் தலைவர்களோ, ஏன். பெரும்பாலான தமிழ்த் தலைமைகளோ நாட்டின் ஒற்றுமை பற்றிப் பேசும்போது அல்லது அறிக்கையிடும்போது, ' இந்த நாட்டில் வாழும் சிங்கள-தமிழ்-முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களும்...' என்றுதான் குறிப்பிடுவார்கள்.
வட மாகாண முதலமைச்சரின் அறிக்கை பூடகமாக எதனைச் சொல்ல வருகின்றது என்பதைப் புத்தியுள்ள எவராலும் புரிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து, இதனைப் பூசி மெழுகப் பார்ப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க, 'இல்லை..அவர் கூறியது சரிதான்; இலங்கையில் சிங்களம்-தமிழ் என்ற இரண்டு இனங்கள் மட்டும்தான் உள்ளன' என்று எவராவது சொன்னால், அவர்கள் இனவாதத்தினதோ அல்லது பாசிசத்தினதோ பாசறைகளில் பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
.
இனி, விக்னேஸ்வரன் அவர்களின் ஊடக அறிக்கையைப் படிக்கத் தவறியவர்களுக்காக அதனை இங்கு தருகின்றேன்.
என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன்.
என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.
தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது.
இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.
அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம்.
எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது.
போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி பூர்த்தி செய்வதான கிட்டிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது.
சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும்.
சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இங்கு வன்முறைக்கு இடமில்லை. பலாத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.
எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக! இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக!
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை.
எஸ் ஹமீத் போன்ற கீழ்மட்ட சிந்தனையுள்ள இனவாதிகளின் கருத்துக்களை,
ReplyDeleteநல்ல அறிவு, சிந்தனை, பண்புள்ள சிறுபான்மை மக்கள் எவரும் இக்காலத்தில் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இனவாதிகளின், அந்த காலம் போய்விட்டதை எஸ் ஹமீத் மறந்துவிட்டார்.
முஸ்லீம் என்று ஏன் மதத்தை கூறுகிறீர்கள். அவர் (விக்கினேஸ்வரன்) தமிழர் என்று கூறியது பொதுவாகத்தான் . உங்களுடைய (எஸ் ஹமீத்) கருத்து எங்களுக்கு விளங்கவில்லை. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம், புத்தம் என்று கூற வேண்டும் என்று நினைக்கிறீர்களா. அவர் (விக்கினேஸ்வரன்) மதம் சமபந்தமாக எதுவும் பேசவில்லை. தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர். சிங்களம் பேசும் முஸ்லீம்கள் சிங்களவர்கள். மதம் வேறு இனம் வேறு. VSDrammen
ReplyDelete