இன்னும் மேலதிகமாக 25 மில்லியன் ஐரோப்பியர்கள் வறுமையை எதிர்கொள்கின்றனர்.By Barry Mason
“ஐரோப்பா முழுவதிலும் இன்னும் கூடுதலாக 15 முதல் 25 மில்லியன் மக்கள் 2025 ஐ ஒட்டி வறுமையில் வாழும் எதிர்காலத்தை எதிர்நோக்கலாம்” என்று ஆக்ஸ்பாம் வளர்ச்சி அறக்கட்டளை கூறுகிறது. ஓர் அறிக்கையில், “ஒரு எச்சரிப்புக் கதை— ஐரோப்பாவில் சிக்கனம் மற்றும் சமத்துவமின்மை உடைய உண்மைச் செலவு” என்பதில் அறிக்கை அப்பட்டமாக “ஐரோப்பா இழந்துவிட்ட ஒரு தசாப்தத்தை எதிர்கொள்கிறது” எனக் கூறுகிறது.
2008 ஆண்டு நிதிய நெருக்கடிக்குப் பின் ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகள் விளைந்துள்ளன; ஆளும் உயரடுக்கு, வங்கிகளை பிணை எடுத்ததின் செலவை தொழிலாளர்களை கொடுக்குமாறு செய்துள்ளதின் விளைவுதான் இது. இந்த அறிக்கையானது “ஐரோப்பிய நாடுகளில் சிக்கனத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலவற்றில் மிக அதிக செல்வம் படைத்தவர்கள் தங்களுடைய வருமானம் உயர்வதையும், மிக வறியவர்கள் தங்களுடைய வருமானங்கள் சரிவதையும் கண்டனர்” என்று குறிப்பிடுகிறது.
ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையில் செயற்படுத்தும் நடவடிக்கைகள் “இலத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆபிரிக்காவில் 1980 மற்றும் 1990களில் சுமத்தப்பட்ட அழிவு கொடுத்த கட்டமைப்பு சீரமைப்புக் கொள்கைகளுடன் பெரிதும் ஒத்துள்ளன. இக்கொள்கைகள் தோல்வி அடைந்தவை: நோயாளியை கொல்வதன் மூலம், நோயை குணப்படுத்த முயன்ற மருந்தைப் போன்றது. இவை மீண்டும் நடைபெற அனுமதிக்கப்படக்கூடாது.”
வெட்டுக்களின் அளவுகள் பற்றி அது உதாரணங்களைக் கொடுத்துள்ளது: “2010ல் இருந்து 2014 வரை மொத்த பொதுச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அயர்லாந்தில் 40% வெட்டப்பட்டிருக்கிறது, பால்டிக் நாடுகளில் 20%, ஸ்பெயினில் 12% மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் 11.5% வெட்டப்பட்டிருக்கிறது.” அறிக்கை ஐக்கிய இராச்சியத்தில் 2010ல் இருந்து 2018 க்குள் 1.1 மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் அகற்றப்பட்டிருப்பார்கள் என்றும் கூறுகிறது.
சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன; அறிக்கை குறிப்பிடுகிறது: “2010ல் ஐரோப்பாவில் சுகாதாரத்திற்கு செலவு செய்யப்பட்டது பல தசாப்தங்களில் முதல் தடவையாக குறைந்ததாகப் பதிவாயிற்று. அயர்லாந்திலும், கிரேக்கத்திலும் செலவுகளில் வெட்டுக்கள் 6% ஐ கடந்துள்ளன, ஒரு தசாப்த வளர்ச்சியை திருப்பிவிடும் வகையில்.”
வேலையின்மை விகிதங்கள், நீண்ட கால வேலையின்மை, இளைஞர் வேலையின்மை ஆகியவை 2000 லிருந்து மிக அதிக அளவில் உள்ளன: “ஸ்பெயின், கிரேக்கத்தில், வேலையின்மை 24% என 2007 இல் இருந்து 2012 க்குள் மும்மடங்கு ஆயிற்று.... அயர்லாந்து, கிரேக்கம் மற்றும் ஸ்பெயினில் நீண்டகால வேலையின்மை விகிதம் 2008க்கும் 2012க்கும் இடையே 4 மடங்கு உயர்ந்துள்ளது. இது ஐரோப்பாவில் நீண்டகால வேலையில்லா மக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாதவர் எண்ணிக்கையைப் போல் பாதி அதிகமாகும். இளைஞர் வேலையின்மை போர்த்துக்கல்லில் குறிப்பாக 42% அதிகமாகும். ஸ்பெயினில் 56% மற்றும் கிரேக்கத்தில் 59% -- இவைகள் 2008ல் பதிவு செய்யப்பட்டதை விட இரு மடங்கு அதிகமாகும்.” இத்தாலியில் இளைஞர் வேலையின்மை கிட்டத்தட்ட 40% ஆகும்.
இந்த நெருக்கடியில் மறைந்துள்ள சமூகச் செலவு குறைத்துமதிப்பிடப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது; உதாரணமாக பல தனிப் பெற்றோர்கள் “வீட்டை உஷ்ணமாக வைத்திருப்பதற்கும், குடும்பத்திற்கு சீரான உணவை அளிப்பதற்கும் இடையே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை எதிர்கொள்கின்றனர்.” உணவு உதவி மற்றும் பொதுவான சமூக ஆதரவிற்கான கோரிக்கைகள் 2012ன் முதல் பகுதியில் இரு மடங்காகிவிட்டன.
“லிஸ்பனில் மருந்தகங்களில் கிட்டத்தட்ட 20% வாடிக்கையாளர்கள் (பெரும்பாலும் பெண்கள், வேலையற்றோர், வயதானவர்கள்) மருந்துப் பட்டியலில் உள்ள முழு மருந்தையும் செலவைக் கணக்கில் கொண்டு வாங்குவதில்லை. பலரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.”
சிக்கன நடவடிக்கைகளின் முக்கிய இலக்கு, பொது நலச் செலவுகளைக் குறைப்பதாகும். உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தில் செலவுக் குறைப்புக்களுக்கும் வரி அதிகரிப்புக்களுக்கும் இடையேயுள்ள விகிதம் 85:15 ஆகும். வரி விதிப்புகளில் பல, வறியவர்கள் மீது விகிதத்திற்கு அதிகமானவையாகும். மதிப்புக் கூட்டுவரி (VAT) பல ஐரோப்பிய நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒரு கட்டாயமான வரியாகும், ஏனெனில் தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய வருமானத்தின் பெரும்பகுதியை மதிப்புக்கூட்டு வரிக்குச் செலவிடுகின்றனர். இதற்கு மாறாக, “ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு 1 டிரில்லியன் யூரோக்களை வரித் தவிர்ப்பு, ஏய்ப்புக்களில் இழக்கின்றன. ஒப்பீட்டளவில் செல்வத்தின் மீது அதிக புதிய வரிகளும் இல்லை.”
ஆக்ஸ்பாம் அறிக்கையானது இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலகப் பணி அறிக்கையை தயாரிப்பு செய்ததையும் குறிப்பிடுகிறது. அதில் “அநேகமாக எல்லா இடங்களிலும், இளைஞர்கள்.... தங்கள் திறமைகளின் விழைவுகளுக்கு ஏற்றவாறு வேலை கிடைப்பதில் கடினத்தை உணர்கின்றனர்.... இது வரவிருக்கும் பல ஆண்டுகளில் முக்கிய உலகச் சவாலாக இருக்கும்.... சமூக அமைதியின்மை என்னும் இடர் பல பிராந்தியங்களில் உள்ளது” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு ஆக்ஸ்பாம் ஒப்புதல் கொடுத்து, உழைக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக விளக்கியுள்ளது. “ஐரோப்பாவில் இப்பொழுது 10 உழைக்கும் வீடுகளில் ஒன்று வறுமையில் உள்ளது... சைப்ரஸ், அயர்லாந்து, இத்தாலி ஒவ்வொன்றும் உழைக்கும் வறியோர் விகிதங்களை மிக அதிகமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கண்டுள்ளன. தொழிலாளர்கள் பெருகிய முறையில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகள் பாதுகாப்பற்றவை அல்லது அவர்களுடைய தேவைகளைவிட மிகவும் குறைந்தவை எனக் காண்கின்றனர்.”
கண்டம் முழுவதும் ஊதியங்கள் சரிகின்றன, “ஆக்கிரோஷ செலவுக் குறைப்புக்களை செயற்படுத்தும் நாடுகளில் மிக விரைவாக சரிகின்றன; இது மக்களை உயரும் விலையை சமாளிப்பதைக் கடினமாக்கிவிட்டது.” உண்மை ஊதியங்களின் வீழ்ச்சி இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளன, கிரேக்கத்தில் 10% க்கும் மேற்பட்ட சரிவு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலும் போர்த்துக்கல்லிலும் உண்மை ஊதியங்கள் 3% க்கும் மேலாகக் குறைந்துவிட்டன; ஐக்கிய இராச்சியத்தில் நிலைமை இப்பொழுது 2003 மட்டங்களைக் கொண்டுள்ளது.
சிக்கன நடவடிக்கைகள், ஐரோப்பாவிற்குள் சமத்துவமின்மை மட்டங்களுள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொடுத்துள்ளன. சமத்துவமின்மை அதிகம் என்பது 2008 நெருக்கடிக்கு முன்பே இருந்தது; போர்த்துக்கல் மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டும் OECD நாடுகளிலேயே மிக அதிக சமத்துவமற்ற நாடுகள் என அறிக்கை கூறுகிறது.
எனினும் அறிக்கை குறிப்பிடுகிறது, “சிக்கன நடவடிக்கை, ஏற்கனவே சமத்துவமற்ற தன்மையின் அதிகரிப்பை விரைவுபடுத்தி, கடந்த 30 ஆண்டுகளாக OECD நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளின் வரலாற்றுரீதியான தாக்கம் சமத்துவமற்ற தன்மையில் இருப்பதை பிரதிபலிக்கிறது. போர்த்துக்கல், கிரேக்கம் மற்றும் இத்தாலி ஆகியவை தங்கள் நிகர வருமான சமத்துவமின்மை, 2010-11ல் கிட்டத்தட்ட 1% புள்ளி எனக் கண்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கள் பொருளாதார உயரடுக்குளின் ஆதாயங்களில் சிக்கன நடவடிக்கைகளின் நேரடி விளைவாகப் பிரதிபலிக்கின்றன... மிக அதிக செல்வம் படைத்தவர்கள் மொத்த வருமானத்தில் தங்களுடைய பங்கு அதிகரித்துள்ளதைக் காண்கின்றனர், வறியவர்கள் தங்களுடையது சரிந்துவிட்டதைக் காண்கின்றனர்.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்வச் செழிப்பு அதிகமுடைய 10% மக்கள் அதனுடைய வருமானத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியைப் பெறுகின்றனர். வறிய 10 சதவிகிதத்தினர் 3% ஐத்தான் பெறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 செல்வச் செழிப்புடைய மக்கள், கிட்டத்தட்ட 220 பில்லியன் மொத்த வருமானம் கொண்டுள்ளனர்—இது 2008-2010ல் ஐரோப்பிய ஒன்றியம் “ஊக்க நடவடிக்கைகளுக்கு” செலவழித்த 200 பில்லியன் யூரோக்களைவிட அதிகமாகும்.
2011ல் 120 மில்லியனுக்கும் மேலானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர், வறுமை அல்லது சமூகத்திலிருந்து விலக்கப்படல் என்ற இடரில் இருந்தனர்; இந்த எண்ணிக்கை இன்று அதிகமாகித்தான் போயிருக்க முடியும்.
ஐரோப்பாவில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புச் சீரமைப்புத் திட்டங்களின் (Structural Adjustment Programmes - SAPs) பாதிப்பு சிக்கன நடவடிக்கைகள் இலத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, துணை சகாரா ஆபிரிக்காவில் இருந்தவற்றுடன் ஒப்பிடுகையில் எப்படி இருக்கும் என்பதையும் அறிக்கை கூறுகிறது. “சிக்கன நடவடிக்கைகளின் அழிக்கும் பாதிப்புத் திறன் பற்றிய ஒப்புமைகளையும் நாம் பற்றி எடுக்கலாம்.”
இலத்தீன் அமெரிக்காவில் 1980 மற்றும் 2000க்கும் இடைய கட்டமைப்புச் சீரமைப்பு திட்டங்களின் (SAP) விளைவுகள் பற்றிய விவரங்கள் எச்சரிக்கையை கொடுக்கின்றன: “பொதுச் செலவுகள் இல்லாமை, மற்றும் பல முக்கிய சமூக சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டதுடன் இணைந்து, முக்கிய சேவைகளுக்குக் கட்டணம் கொடுத்தல் என விளைந்துள்ளது; இது பலருடைய வசதிக்கு இயலாது எனப் போய்விட்டது.”
சிக்கன நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்கும் தாக்கங்களை கொண்டிருக்கும், 2025 இல் இன்னும் கூடுதலாக 15 முதல் 25 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வார்கள் என்று அறிக்கை கணிக்கிறது. “இந்நடவடிக்கைகள், அதிகாரத்தையும் செல்வத்தையும் சிலர் மட்டும் கொண்ட உயரடுக்கிற்குக் கொடுக்கும்; மில்லியன் கணக்கான இன்றைய இளைஞர்களிடமிருந்து திருடிவிடும்” என்று அது குறிப்பிடுகிறது.
ஆக்ஸ்பாம் அறிக்கையானது சிக்கன நடவடிக்கைகளின் தாக்கங்கள் குறித்த ஒரு பேரழிவு மதிப்பீடாகும். ஆனால் மாற்றீடு எதையும் முன்வைக்கவில்லை. அதன் அற்ப பரிந்துரைகளில் “ஜனநாயக வழிவகைகளில் கூடுதல் பங்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றும் நிதியச் செயற்பாட்டின் மீது ஒரு வரி விதித்தலும் உள்ளன.
0 comments :
Post a Comment