1980 முதல் யுத்தம் முடிவுறும் வரை 28,158 படையினர் உயிரிழப்பு! பாதுகாப்பு அமைச்சு
1980 ஆம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப் பகுதி வரை வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகளால் படைகளைச் சேர்ந்த 28,158 பேர் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு பாராளுமன்றத் துக்கு அறிவித்துள்ளது.
பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு சபாபீடத்தில் சமர்ப்பித்த பதிலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
1980 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வரும் வரை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகளினால் முப்படைகளையும் சேர்ந்த 24,992 பேரும் பொலிஸ் படையில் 2,159 பேரும் விசேட அதிரடிப் படையில் 462 பேரும் சிவில் பாதுகாப்புப் படையில் 545 பேருமாக மொத்தம் 28,158 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கூட இராணுவ ஆஸ்பத்திரிகளிலும் அதற்கு நிகரான இடங்களிலும் 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேவேளை போரில் அங்கவீனமுற்ற படைவீரர் களுக்காக இதுவரை 92.39 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக செலுத்தப்பட்டுள்ளது.
1971 மற்றும் 1988 1989 காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் காரணமாக மேற்படி படைப் பிரிவுகளைச் சேர்ந்த 883 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப்பகுதியில் 320 பேர் அங்கவீனமாகினர். இவர்களுக்கு நஷ்ட ஈடாக 37.97 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
(பா. கிருபாகரன்)
0 comments :
Post a Comment