மண்டேலாவை கொல்வதற்குச் சதி !10 ஆண்டுகளின் பின் குற்றவாளிகளுக்குச் சிறை !
தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (வயது 95). இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரிட்டோரியா வைத்தியசாலையில் கடந்த ஜூன் 8ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
3 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் செப்டம்பர் முதலாம் திகதி வீடு திரும்பினார்.கட்டிலில் படுத்தபடியே வீட்டில் ஓய்வெடுத்து வந்த மண்டேலா மெல்ல நடமாட தொடங்கி விட்டதாக அவரது பேரன் கடந்த மாதம் தெரிவித்தார்.
இந்நிலையில், 1990 மற்றும் 2000 ஆண்டுகளுக்கிடையே மண்டேலாவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரை கொல்ல சதி செய்ததாகவும் வெள்ளையர் விவசாய படையை சேர்ந்த 20 பேர் மீது ப்ரிட்டோரியா நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்தது.
10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த வேளையில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் சிறையிலேயே மரணமடைந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.ஜோகனஸ்பர்க் நகரில் தொடர் வெடிகுண்டு தாக்குதல், ஜனாதிபதியை கொல்லவும் ஆட்சியை கவிழ்க்கவும் சதி செய்தல் ஆகிய குற்றங்களுக்காக 4 வெள்ளையர்களுக்கு 35 ஆண்டு கால சிறை தண்டனையும், மேலும் ஒருவருக்கு 20 ஆண்டு தண்டனையும், இன்னொருவருக்கு 12 ஆண்டு தண்டனையும் விதித்து நீதிபதி எபென் ஜோர்டான் தீர்ப்பளித்தார்.
10 ஆண்டு மற்றும் அதற்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே விசாரணை கைதிகளாக சிறையில் தண்டனையை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment