Thursday, September 19, 2013

தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அதன் ஏகாதிபத்திய சார்பு வழியை அம்பலப்படுத்துகிறது. By W.A. Sunil

இலங்கையில் செப்டெம்பர் 21 நடக்கவுள்ள வட மாகாண சபை தேர்லுக்கான, பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் முன்னணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், அதன் ஏகாதிபத்திய சார்பு வலதுசாரி திருப்பத்தை தெளிவாகக் காட்டுகிறது. அது தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பதாக வாய்ச்சவாடல்கள் விட்டாலும், அதன் பிரதான இலக்கு, அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய சக்திகளின் தலையீட்டுடன் ஸ்தாபிக்கப்படும் கொழும்பு அரசாங்கத்துடனான ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கின் ஊடாக, தமிழ் முதலாளித்துவக் கும்பல்களின் நலன்களை தக்கவைத்துக்கொள்வதே ஆகும்.

தமிழ் கூட்டமைப்பு, தமது வலதுசாரி வேலைத்திட்டத்தை முன்தள்ளுவதன் பேரில் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நபராக, தனது கட்சியில் அங்கத்தவராகவே இல்லாத வி. விக்னேஸ்வரனை, முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. கூட்டமைப்பை தேர்வு செய்வதானது இந்த ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இந்தியாவுக்கும் ஒரு “செய்தியை” அனுப்பும் எனக் கூறி, தமிழ் தட்டுக்களும், யாழ்ப்பாண ஊடகங்களும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் பிரச்சாரம் செய்கின்றன.

2001ல் அமைக்கப்பட்ட தமிழ் கூட்டமைப்பு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் இலங்கை இராணுவத்திடம் தோல்வியடையும் வரை அதன் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்டது.

“இத் தீவில் வாழுகின்ற மக்களின் மத்தியில் பகிரப்பட்டதொரு இறையான்மையின் மூலம் ஆட்சி அதிகாரங்களை பகிர்வதற்கு” தமிழ் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் அழைப்பு விடுக்கின்றது. இந்த “அதிகாரப் பரவலாக்கல், காணி, சட்டம் மற்றும் ஒழுங்கு, சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட சமூக-பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும்” உள்ளடக்கி இருக்கும். தமிழ் கூட்டமைப்பு, இலங்கை முதலாளித்துவ அரசுக்குள், தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் ஒரு பங்காளியாக அது இயங்கக் கூடியவாறு, தமிழ் முதலாளித்துவத்துக்கு அதிகாரத்தை பகிரும் ஒரு பொறிமுறையை எதிர்பார்க்கின்றது.

இது கொழும்பு அரசாங்கம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஒத்துழைப்புடன் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு பொறிமுறையாகவே இருக்கும். “மாகாணத்தில் நீண்டகால முதலீடு மற்றும் நிதி உதவி பற்றிய பிரச்சினைகளை அனுகுவதற்கு இலங்கை அரசு, சர்வதேச சமூகம் மற்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் தமிழ் கூட்டமைப்பு செயற்படும்,” என விஞ்ஞாபனம் தெரிவிக்கின்றது.

“நிரந்தரமான சமாதானத்தின் மூலம் இலங்கையில் வாழும் சகல மக்களுக்கும் நீதி மற்றும் உண்மையான நல்லிணக்கத்தையும் சர்வதேச ஆதரவின் கீழ் மட்டுமே அடைய முடியும்,” என வாதிடும் கூட்டமைப்பு, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இலங்கையில் தலையிடுமாறு அழைப்பு விடுக்கின்றது.

மேற்கத்தைய சக்திகளின் தலையீட்டை அது வலியுறுத்துவதை நியாயப்படுத்தும் முயற்சியில், தமிழ் கூட்டமைப்பு, தமிழர்களுக்கு எதிரான சிங்கள மேலாதிக்க கொழும்பு அரசாங்கத்தின் அதிகரித்துவரும் பாரபட்சங்களின் தசாப்தகால வரலாற்றையும், சிங்கள மற்றும் தமிழ் தட்டுக்களுக்கு இடையிலான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குக்காக மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தோல்வியையும், ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட இனவாத யுத்தத்தால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அழிவுகளையும் சுட்டிக் காட்டுகிறது. “இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தன்னை மீள் கட்டமைத்து அதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதிருந்தமையும், தமிழ் குடிமக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டமையும்தான் சர்வதேச சமூகத்தின் வகிபாகம் மிகவும் தவிர்க்க முடியாததாக மாறியமைக்கு வழி வகுத்தது” என அது வாதிடுகின்றது.

தமிழ் உயர் தட்டினருக்கு ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை வழங்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை நெருக்குவதற்காக, “சர்வதேச சமூகத்திடமிருந்து”, உதாரணமாக ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இந்தியாவிடமிருந்து அழுத்தம் தேவை என கூட்டமைப்பு வாதிடுகின்றது. இராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை தூர விலக்கிக்கொள்வதற்காக அதை நெருக்குவதற்கு, புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை பற்றிக்கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்தைய சக்திகளிலேயே தமிழ் கூட்டமைப்பு தங்கியுள்ளது. ஜனாதிபதி பரக் ஒபாமாவின் “ஆசியாவுக்கு மீண்டும் திரும்புதல்” திட்டத்தின் கீழ், வாஷிங்டன் அதன் உலக மேலாதிக்கத்துக்கான இராணுவ உந்துதலின் பாகமாக, சீனாவை தனிமைப்படுத்தி சுற்றி வளைக்கும் பிரச்சாரத்தை உக்கிரமாக்கியுள்ளது.

தமது சொந்த மூலோபாய நலன்களுக்காக இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்குவதில், “மனித உரிமை” விவகாரத்தை பயன்படுத்தும் மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் பிரச்சாரத்துடன் அணிசேர்ந்துள்ள தமிழ் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம், “இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீது ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையை” கோருகின்றது.

இந்த விஞ்ஞாபனம் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குக்காக தலையீடு செய்யுமாறு ஏகாதிபத்திய சக்திக்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கின்றது. “இத்தகைய சூழ்நிலைகளில், சர்வதேச சமூகம் உலகெங்கும் பல சந்தர்ப்பங்களில் நியாயபூர்வமாகவே ஒரு முக்கிய பங்கினை வகித்துள்ளது.” அத்தகைய பிற்போக்கான ஏகாதிபத்திய-சார்பு கொள்கைகளின் ஊடாக, ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட கொசோவோ மற்றும் கிழக்குத் தீமோர் போல் மட்டுமன்றி, தமிழ் மக்களுக்கு இன்னொரு இரத்தக்களரி அழிவை கூட்டமைப்பு தயார் செய்கின்றது. லிபியாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கும் இப்போது சிரியாவுக்கு எதிரான அச்சுறுத்தலுக்கும் கூட்டமைப்பு தனது ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது.

ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் 26 ஆண்டுகளாக நீண்ட தமிழர்-விரோத இனவாத யுத்தம் முன்னெடுக்கப்பட்டமை மற்றும் புலிகள் ஏன் தோற்கடிக்கப்பட்டனர் என்பது பற்றி கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மௌனம் காப்பது தற்செயலானது அல்ல. தமிழ் மக்கள் முகங்கொடுத்த அழிவுகளுக்கு சிங்கள முதலாளித்துவம் பிரதான பொறுப்பைக் கொண்டுள்ள அதே வேளை, தமிழ் கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத புலிகள் உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், அந்த நிலைமைக்கான அரசியல் பொறுப்பில் பங்கு வகிக்கின்றன.

தனது வர்க்க ஆட்சியை பாதுகாத்துக்கொள்ளும் பிரதான வழியாக தொழிலாள வர்க்கத்தை இனவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு சிங்கள முதலாளித்துவம் தமிழர்-விரோத இனவாதத்தை பயன்படுத்துவதுடன் ஒத்துப் போகும் வகையில், தமிழ் முதலாளித்துவமானது தமது சொந்த சிறப்புரிமைகளுக்காக பேரம் பேசும் ஒரு அரசியல் உபகரணமாக தமிழ் இனவாதத்தை பயன்படுத்துகிறது.

புலிகளின் தோல்வியானது அடிப்படையில் அவர்களது இராணுவப் பலவீனத்தால் நேர்ந்ததல்ல, மாறாக, அது அவர்களின் அரசியல் வங்குரோத்தின் விளைவாகும். இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் உட்பட சர்வதேச சக்திகளின் ஆதரவுடன், இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் தனியான அரசு ஒன்றை ஸ்தாபிப்பதே புலிகளின் முன்னோக்காகும். புலிகள் வேண்டுகோள் விடுக்கும் அதே சர்வதேச சக்திகள்தான், 2006ல் இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்தே கொழும்பு அரசாங்கத்துக்கு தளவாட, நிதிய மற்றும் இராணுவ ஒத்துழைப்பை வழங்கின. பாரம்பரிய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே, புலிகளும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை வெறுத்ததோடு தாம் விடுதலை செய்யப்போவதாகக் கூறிக்கொண்ட தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கினர். புலிகள் தமிழ் மக்கள் மத்தியிலும் தமது சமூகத் தளத்தை இழந்தனர்.

2001ல் தமிழ் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே அது புலிகளின் மனமுவந்த ஆதரவாளராக இருந்து வந்தது. கொழும்பு அரசாங்கத்துடனான அரசியல் சமரசத்துக்குத் தமது தயார் நிலையை காட்டுவதன் பேரிலும், ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்கும், தமிழ் கூட்டமைப்பு தன்னை புலிகளில் இருந்து தூர விலக்கிக்கொள்ள முயற்சிக்கின்றது. ஜனவரியில், வரவு செலவுத் திட்டத்துக்கான பாராளுமன்ற விவாதத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் புலிகளை ஒரு “பயங்கரவாத” அமைப்பாக வகைப்படுத்தினார். இந்த உரையில் அவர் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை திருப்பியழைக்கும் கோரிக்கையையும் கைவிட்டார். யுத்தத்துக்கு முன்பு இருந்தவாறு, பாதுகாப்பு படைகளை முகாம்களுக்குள் மட்டுப்படுத்த வேண்டுமெனக் கோரிய அவர், அந்த பிரதேசங்களில் தமது கடமைகளை முன்னெடுக்க பாதுகாப்பு படைகளுக்குள்ள உரிமையை அங்கீகரித்தார். கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் அதை வலியுறுத்தியுள்ளது.

நவசமசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி (யூ.எஸ்.பீ.) போன்ற போலி இது கட்சிகள், தமிழ் மக்களை கூட்டமைப்பின் அரசியல் பொறிக்குள் வீழ்த்த கணிசமான வகிபாகம் ஆற்றுகின்றன. கூட்டமைப்பை “தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக” முன்னிலைப்படுத்தும் அதேவேளை, இலங்கையில் தேசியப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு “அதிகாரப் பரவலாக்கல்தான்” என அவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே, அனைத்துலக சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இனவாத யுத்தத்துக்கு எதிராகவும் புலிகளின் பிரிவினைவாதத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் சிங்கள மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் போராடி வருகின்றன.

தொழிலாளர்களும் இளைஞர்களும் கூட்டமைப்பின் பிற்போக்கு முன்னோக்கை நிராகரிக்க வேண்டும். தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுமாக உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சமூகத் தேவைகளையும் வெற்றிகொள்வதன்கான ஒரே வழி, சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்த தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதே ஆகும்.

எமது முன்னோக்கை வாசிக்குமாறும் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ள தீர்மானிக்குமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com