சாகும்வரை உண்ணாவிரதத்தில் சகாதேவன்!
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத் தலைவரும், வடமாகாண சபை வேட்பாளருமான வி.சகாதேவன் சாகும்வரை உண்ணாவிரதத்தை முன்னனெடுத்து வருகின்றார். நல்லூர் ஆலய வளாகத்தில் 04 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நேற்றையதினம் வியாழக்கிழமை காலை 9.30 மணிமுதல் அவர் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கோரியும் மேற்படி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
வடக்கிலேயே வாக்குரிமை பெற்றுள்ள சகல மக்களும் தங்களுடைய வாக்குச்சீட்டினை இந்த தேர்தலில் ஒரு பலமான ஆயுதமாக நினைத்து பயன்படுத்த வேண்டும்.
அரசியல் போராட்டத்திற்கு ஒரு தொடக்கமாக இந்த தேர்தல் அமையப்போவதால், தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் ஆயுத கலாச்சாரத்தில் மக்களை கொன்றவர்களையும், அரசியல் மூலம் மக்களை காட்டிக்கொடுத்தவர்களையும் இனங்கண்டுகொள்வதுடன், அவ்வாறானவர்களை வீடுகளிலிருந்து துரத்தியடித்து காட்டிற்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக மட்டுமே 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபையில் தமிழ் மக்கள் முழுமையான அதிகாரங்களை பெறவேண்டுமாயின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமிழ்க்கட்சியாக அமைய வேண்டும் இதுவே சகல பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக அமையும்.
தீய சக்திகள் தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து, தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். அத்துடன் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தை, சமூக விரோத சக்திகள் குழப்பி விடாமல் இறைவனின் ஆசீர்வாதத்தை தான் கேட்டுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய வளாகத்தில் தனது சாகும்வரை உண்ணாவிரதத்தை முன்னெடுத்துவரும் சகாதேவன் எவரிடமும் எதுவும் பேசவில்லை என்பதுடன் பத்திரிகையாளர்களிடமும் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆயினும் அவர் சார்பில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க உறுப்பினர்கள் அங்கு கருத்து தெரிவிக்கையில், இரண்டாவது கோரிக்கையான ஆயுத கலாச்சாரத்தில் மக்களை கொன்ற மற்றும் அரசியல் மூலம் மக்களை காட்டிக்கொடுத்த புளொட் போன்ற அமைப்புக்கள் தமிழ் தேசியம் பேசுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் இவ்வாறான சமூகவிரோத சக்திகளே தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தை குழப்பி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சகாதேவன் மேற்கொள்வது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடாத்தும் மாய்மால உண்ணாவிரதம் போலன்றி இறைவனின் துணையுடன் நெஞ்சில் உரத்துடனும் நேர்மைத் திறனுடனும் சாகும்வரை உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படுவதாகவும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
1 comments :
தமிழ் நாட்டு கோமாளி அரசியலை யாழ் தமிழ் அரசியல் மிஞ்சிவிட்டது.
நாறு, நாறு என்று நாறுகிறது எமது அரசியல் களம்.
இதற்கு ஆமிக்காரனின் அடி உதையை தவிர வேறு மருந்து இவ்வுலகில் இல்லை.
இப்போ புரிகிறது யாழ்ப்பாண தமிழனின் குணம்.
Post a Comment