த.வி.கூ சர்வதேசத்திற்குச் செல்லும் நாள் ஐதேகவினதும் சஜித்தினதும் பலத்தைத் தெரிந்துகொள்ளும்!
இலங்கையை ஆட்டம் காணச் செய்வதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி சர்வதேசத்திற்குச் செல்லும் நாளில் ஐக்கிய தேசியக் கட்சி பற்றியும், சஜித் பிரேமதாச யார் என்பது பற்றியும் சிறந்த முறையில் தெரிந்துகொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லையென்றும், அமைதியாகவிருக்கும் மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தையும், குரோதத்தையும் உண்டுபண்ண தமிழர் விடுதலைக் கூட்டணி முயன்றுவருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரண்முதுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்களில் ஒருபகுதியினருக்கு சிறுவர் கணக்கு, பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் நிதி தொடர்பான அறிவுறுத்தல்களை மீறி தாம் விரும்பியவாறு மாகாண சபைகளுக்கு வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்ள யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
வட மாகாண சபை உள்ளிட்ட ஏனைய அனைத்து மாகாண சபைகளும் இலங்கை அரசாங்கத்தின் கீழேயே இயங்குகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசின் அநுமதியின் கீழ் மாகாண சபைகளின் அபிவிருத்திகளுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'தங்களுக்கு தேவையான முறையில் நடப்பதற்கு அரசாங்கம் இணங்காதவிடத்து சர்வதேசத்தின் பக்கம் தாம் செல்ல வேண்டிவரும் என தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் பிதற்றித் திரிகின்றனர். இலங்கைக்கு சர்வதேச ரீதியில் சேறு பூச அவர்கள் நினைப்பதால் அவர்களுக்கு என்னதான் இலாபம் கிடைக்கப் போகின்றதோ தெரியாது.. முடிந்தால் பிறந்த நாட்டுக்கு எதிராக அவர்கள் சர்வதேசத்திற்குச் செல்லட்டும் என நான் சவால் விடுகிறேன்...' எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment