Thursday, September 12, 2013

த.தே.கூ. நான்காவது ஈழப்போர் என்கின்றது ! மு. காங்கிரஸ் சுயாட்சி, சுயநிர்ணயம் என்கின்றது! எது ஈழப்போர்? எது சுயாட்சி?

நான்காவது ஈழப்போர் ஆரம்பம் என்ற கோஷத்துடன் தமிழ் தேசியவாதிகள் வாக்கு கேட்கின்றார்கள். அது போன்ற தொரு வேலையைத்தான் இன்று முஸ்லிம் காங்கிரஸூம் மேற்கொள்கின்றது. தங்களின் வங்குறோத்து அரசியலை மறைப்பதற்காக வடமாகாண மக்களுக்கு உணர்வூட்டி அவர்களை மீண்டும் துன்பத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று ஜனாதிபதி கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்ன ணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

பல வருட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் வடக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். தங்களை தாங்கள் ஆளுவதற்கான ஜனனாயக சூழ்நிலை இங்கு உருவாகியுள்ளது. முப்பது வருடமாக அழிக்கப்பட்ட வடக்குமாகாணத்தை நான்கு வருடத்திற்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரவனைப்பினால் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் மாத்திரமின்றி வடக்கு மக்களை அவற்றை அனுபவிக்கச் செய்துள்ளோம்.

இம்மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்கின்றபோது இன மத பிரதேச வேறுபாடு பாராமல் நாங்கள் அவற்றை நிறைவேற்றி வருகின்றறோம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிக பலத்;துடன் உள்ளது. இதன் காரணமாக இவ் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே எம்மால் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மாவட்டத்தை முன்னேற்றவும் முடியும்.

இங்கு நிலவுகின்ற சமதானத்தை விரும்பாதவர்கள் மக்களை குழப்புகின்ற செயலில் ஈடுபடுகின்றனர். தேர்தல் வாக்குறிதியளிக்க எந்த நல்ல விடயமும் தென்படாததால் நான்காவது ஈழப்போருக்கு ஆதரவு தாருங்கள் என வாக்கு கேட்கின்றார்கள்.

மக்களை உணர்ச்சியூட்டி வாக்கு கேட்கும் தமிழ்த் தேசியவாதிகளின் பிள்ளைகள் இங்கு நடந்த யுத்தகளத்தில் நின்றுள்ளார்களா என்றால் இல்லவே இல்லை. வெளிநாடுகளிலும் கொழும்பிலும் சொகுசு வாழ்க்கை வாழும் இவர்களுக்கு பிள்ளைகளை இழந்த தாயின் வலி ஒருபோதும் தெரியாது.

இன்று கை,கால் இழந்து அங்கவீனர்களாக இருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை சிந்திக்காமல் தங்களது அரசயில் எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் தமிழ் மக்களை பலி கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகுகின்றது.

தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் தமிழ் மக்கள் படும் துன்பத்தை அறிந்திருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசயக் கூட்டமைப்பை போல் சமகால அரசியலின் யதார்த்தம் விளங்காமல் தங்களின் சுயநல அரசியலுக்காக வட முஸ்லிம்களை கேடயமாக பயன்படுத்த முற்படுகின்றனர். வடக்கில் முஸ்லிம் காங்கிரஸினர் துடுப்புக்கள் இல்லாத தோணி போல் அங்கும் இங்கும் அலைமோதுகின்ற இக்கட்டான ஒரு நிலைக்கு வட முஸ்லிம்களால் ஒதுக்கப் பட்டுள்ளனர்.

20 வருடத்திற்கு பின்னர் மீளக்குடியேறிய வட முஸ்லிம்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யாமல் அந்த மக்களிடம் சென்று பள்ளி உடைப்பைக் கூறி வாக்குகேட்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்காவது ஈழப்போர் என்கின்றனர் அதேபோன்றே முஸ்லிம் காங்கிரஸினர் சுயாட்சி, சுயநிர்ணயம் என்கின்றனர்.

என் உயிருக்கு மேலான வடக்கு முஸ்லிம்கள் வறுமையால் அழிந்து போவது தான் சுயாட்சியா? எதிர்ப்பு அரசியல் என்று பள்ளி உடைப்பைக் கூறி கடினத்திற்கு மத்தியில் பெற்றுக் கொடுத்த காணிகளை, வீடுகளை, நிம்மதியை இழந்து முஸ்லிம்கள் வாழவேண்டும் என்பதுதான் முஸ்லிம் காங்கிரஸின் சுயநிர்ணயமா? மத்திய அரசில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து தண்டவாளம் போல் செயற்படாமல் தமிழ் தேசியக் கூட்டமைப் போல் முஸ்லிம் மக்களை பலிகொடுக்க முற்படுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸூம் அதன் தலைமையும் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு இயங்குகின்றது. வடமுஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸூக்கு இடும் ஒவ்வொரு புள்ளடியும் மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதாக உள்ளது. தூரநோக்கற்றவர்களின் சுயநல அரசியலுக்கு துணைபோகாமல் வடக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் எதிர்கால சந்ததியின் சுதந்திரமான நிம்மதியான வாழ்க்கைக்கு எங்களின் கரத்தை பலப்படுத்துங்கள் என மேலும் தெரிவித்தார்.

(இப்னு ஜமால்தீன்)

No comments:

Post a Comment