நோயாளியின் மரண ஒப்புதலும், அதை தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து முடிந்த பாரிய அறுவைச் சிகிச்சையும் ! கல்முனையில்! படங்கள்
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் பல அபிவிருத்தி முன்னேற்றங்கள் அடையாளப் படுத்தப் படுகின்றன. கடந்த பல தசாப்தங்களாக எமது நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக கல்வி, பொரு ளாதாரம், விவசாயம், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளுடன் கூடிய அனைத்து அத்தியவசிய தேவைகளும் முடக்கப்பட்டும் செயலிழந்தும் போன நிலையில் சுகாதார துறை இன்று பாரிய மாற்றம் கண்டு வருவது வரவேற்க தக்கதான விடயமாகும்.
குறிப்பாக யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தின் கல்வி, பொருளாதாரம், விவசாயம் ஆகிய அத்தியவசிய தேவைகளில் நிறைவு காண்பதற்கு காலம் தேவைப்பட்டாலும் சுகாதார துறையில் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளதை எவராலும் மறுத்துரைக்க முடியாது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகள் ஒரு காலகட் டத்தில் வெளி நோயாளர் பகுதியை மட்டுமே இயக்கிக் கொண்டு மாத்திரைகள், மருந்துகள் வழங்கும் நிலையங்களாகவே காணப்பட்டன. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கும் இலங்கையின் சுகாதார துறை வளர்ச்சிக்கு மத்திய, மாகாண அரசாங்கங்களும் சுகாதார அமைச்சுக்களும் காட்டிவருகின்ற அர்ப்பணிப்பும் அவதானமும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தின் சுகாதார துறையை மேலோங்க செய்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு திருமலை ஆகிய மாவட்டங்களில் மாகாண சபையின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பது சுகாதார துறையின் போட்டித்தன்மையுள்ள விருத்திகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, அக்கரைப்பற்று ,கல்முனை போன்ற பிரதேசங்களில் உள்ள வைத்திய சாலைகளை மக்கள் பெரிதும் எதிர் பார்ப்புடன் நம்பியிரு க்கின்றனர். இந்த எதிர் பார்ப்பு இன்று இங்குள்ள வைத்தியர்களினால் நிறைவேற்றப்படுவதும் வரவேற்கக் கூடியதே.
ஒரு காலத்தில் சிறந்த வைத்தியசாலைகளையும் தகுதியுள்ள வைத்தியர்களையும் நாடி இங்குள்ள மக்கள் கொழும்பு, கண்டி நகரங்களுக்கு மொழிபெயர்ப்பு கூலியாட்களுடனும் பண மூட்டைகளுடனும் பயந்து போய் வந்த காலம் இன்று மலையேறி விட்டது. தற்போது எம்மிடத்தில் இருக்கின்ற வைத்திய சாலைகளை எமது மண் பெற்றெடுத்த வைத்தியர்கள் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பெருமைப்படுத்தும் சாதனை நிகழ்வொன்று கடந்த வாரம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது.
ஓன்பது மாதங்களாக நீரோ, உணவோ அருந்த முடியாத நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் மரண ஒப்புதல் வழங்கப்பட்டு நடை பெற்ற சத்திர சிகிச்சையை இக்கட்டுரையில் விபரிக்க விரும்புகின்றேன்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்மாந்துறையை சேர்ந்த 56 வயதுடைய நோயாளியை பரிசோதனை செய்த சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம்.சமீம் குறித்த நோயாளிக்கு உணவுக்கால்வாயில் புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதன் பின்னர் நோயாளியின் உறவினர்களிடம் மகரகம தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாகவும் சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை கேள்வியுற்ற நோயாளியின் உறவினர்கள் செய்வதறியாது கதறினார்கள் அவர்களின் கதறலுக்கு காரணம் வறுமைதான் இவர்களது குடும்ப நிலையை அறிந்த சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம்.சமீம் இந்த நோயாளிக்கான சத்திர சிகிச்சையை சம்மாந்துறையில் செய்யலாமா என சிறிது முயற்சித்தார். ஆனால் வைத்தியரின் அந்த முயற்சியானது சம்மாந்துறை வைத்திய சாலையில் செய்யலாமா என்ற கேள்வியை அங்கு ஏற்படுத்தியது.
நோயாளி தொடர்பான சோதனைகள், அறிக்கைகளைப் பெறுவதற்கு கூட சம்மாந் துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் வசதி இல்லாத போதும் சத்திர சிகிச்சை நிபுணரின் நட்பு காரணமாக அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய போதனா வைத்திய சாலைகளின் உதவியுடன் சோதனைகளையும் அறிக்கைகளையும் பெற்றுக் கொண்டார்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணரின் விருப்பத்துக்கு மாறாக குறித்த நோயாளியின் உறவினர்களின் வறுமைகாரணமான வற்புறுத்தலுக்கமைய சத்திர சிகிச்சையை தானே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டபோது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சையை செய்வதற்கான எந்தவொரு வசதியும் இருக்கவில்லை. இவ்வேளைதான் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீரை சந்தித்து சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம்.சமீம் நிலமையை விளக்கினார். இந்த இக்கட்டான நிலையை அறிந்த வைத்திய அத்தியட்சகர் இந்த சத்திர சிகிச்சையை செய்து முடிப்பதற்கு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் தேவையான அனைத்து உதவியையும் வழங்குவதாக தெரிவித்தார்.
அதன் பிரகாரம் குறித்த நோயாளி சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் இருந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டார். அதன் பிற்பாடு நோயாளியின் இரண்டு ஆண்பிள்ளைகள் வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டு நோயாளியின் உடல் உள நிலைபற்றியும் சத்திர சிகிச்சை முறை ,மயக்கமருந்து கொடுக்கும் முறை சத்திர சிகிச்சையின் மயக்கமருந்தின் பிற்பாடு ஏற்படும் விளைவுகள் பாதிப்புக்கள் பற்றியும் சுகமடையும் வீதம் பற்றியும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டது.
நோயாளியின் இதய சுவாச நிலையானது சத்திர சிகிச்சைக்கு பொருத்தமில்லையென்பதும் சிக்கல் ஏற்படும் வீதம் மரண வீதம் என்பனவும் அங்கு விளங்கப் படுத்தப்பட்டது. குருதியில் ஈமோ குளோபின் அளவு குறைவாக இருப்பதும் குருதி மாற்றீடு தேவைப்படும் என்பதும் மரண வீதம் அதிகம் என்பதும் குணமடையும் வீதம் குறைவு என்பதும் பற்றி நோயாளியின் ஆண் மக்கள் இருவருக்கும் தெளிவாக விளக்கப்பட்டது. இவ்விளக்கத்தை பெற்றுக் கொண்டதன் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் இருவரும் மரண ஒப்புதலுக்கான இணக்கத்தை தெரிவித்தனர்.
இவ்வருடம் கடைசிப் பகுதியில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் 25வது வருட வெள்ளிவிழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு சாதனை இடம் பெற்றிருப்பது இவ்வைத்திய சாலையின் நாமத்தை உயர்த்துகின்ற நிகழ்வாகும்.
உணவுக்கால்வாயிலிருந்து இரைப்பை பரவியிருந்த புற்றுநோய் தாக்கத்துக்குள்ளான பகுதியை துண்டித்து எடுத்து விட்டு மாற்று உணவுக்கால்வாய் பொருத்தப்பட்டு நோயாளி பூரண சுகமடைந்துள்ளார்.
எட்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட் இந்த பாரிய சத்திர சிகிச்சை நடை பெற்று ஆறு நாட்களாக அவசர சத்திர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு அதன் பின்னர் வைத்திய அத்தியட்சகர் நஸீர் சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் ஆகியோரது தலைமையில் நோயாளிக்கு நீர் வழங்கப்பட்டது. தங்கு தடையின்றி உணவுக் கால்வாய் நீர் இறங்கியதால் சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளதை வைத்தியர் குழு உறுதிப்படுத்தினார்கள்.
தற்போது மீண்டும் நோயாளி சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு தனது பழைய நிலைக்கு திரும்பி வருகின்றார். தற்போது நீர் ஆகாரம் அருந்துவதாகவும் உடல் நன்றாக இருப்பதாகவும் நோயாளியாக இருந்தவரே தெரிவிக்கின்றார். தற்போது நன்றாக கதைக்கின்றார்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் இந்த சத்திர சிகிச்சை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் எமது பிரதேசத்தில் இந்த சத்திர சிகிச்சையை செய்ய முடியாதென உறுதிபட முடிவெடுத்த நான் நோயாளியின் வறுமையினையும் குடும்ப சூழலையும் கருத்தில் கொண்டு மரண ஒப்புதலையும் பெற்றுக் கொண்டு என்னால் செய்யப்பட்ட இந்த சத்திர கிச்சை பூரண வெற்றியளித்தமைக்கு இறைவனுக்கு நன்றியுடையவனாகவும், அம்பாறை போதனா ,மட்டக்களப்பு போதனா ,கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைகள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் அதன் பிரதானிகளுக்கும் பொறுப்பு வைத்தியர்களுக்கும் குறிப்பாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், சத்திர சிகிச்சை வைத்தியர்களான டாக்டர் வீந்திரன்,டாக்டர் நிமலரஞ்சன் ஆகியோருக்கும் விசேடமாக மயக்கமருந்தேற்றல் வைத்திய நிபுணர் டாக்டர் கோஸல ஆகியோருக்கும் தாதி உத்தியோகத்த சகோதர சகோதரிகளுக்கும் குணமடைந்துள்ள நோயாளி சார்பாக நன்றியை தெரிவித்துள்ளார்.
இதே வேளை இச்சம்பவத்தை கேள்வியுற்ற முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சரும் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஸ்தாபகருமான ஏ.ஆர்.எம். மன்சூர் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்குச் சென்று நோயாளியை பார்வையிட்டதுடன் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீமையும், அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியடசகர் டாக்டர் நஸீரையும் தாங்கள் ஆற்றியிருக்கும் பாரிய மகத்தான சேவைக்காக மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார். அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலிருந்து சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டதைடுத்து வைத்திய சாலைக்கு சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நோயுற்றிருந்த அந்த தாய்க்கு தன்கையால் பால் அருந்தக் கொடுத்து ஆறுதல் கூறி சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீமை பாரட்டினார்.
இந்த சத்திர சிகிச்சை கிழக்கு மாகாணத்துக்கு ஒரு பாடத்தை கற்பித்துள்ளது. இருக்கின்ற வைத்திய சாலைகளில் வளங்கள் இருந்தால் நாம் வைத்திய சேவை தேடி கொழும்புக்கோ, கண்டிக்கோ செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. எனவே இந்த விடயத்தில் அரசியல் தலைமைத்துவங்கள் கவனம் செலுத்தி வைத்திய சேவையை மேலோங்க செய்வதன் மூலம் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீமை போண்ற இன்னும் பலரது சேவையை பெறமுடியும்.
யு.மொகம்மட் இஸ்ஹாக்
யு.மொகம்மட் இஸ்ஹாக்
1 comments :
Hats off to the team.
Post a Comment