இங்கு வந்து சவக்குழிகளைத் தோண்டும் முயற்சியில் ஈடுபடுவதை நாம் மிகுந்த மனவருத்தத்துடன் பார்க்கின்றோம் - பேராயர்
நாட்டில் அமைதி, சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையில் மனித உரிமைகள் பற்றி பேசுபவர்களும் அது தொடர்பான இயக்கங்களும் இங்கு வந்து சவக்குழிகளைத் தோண்டும் முயற்சியில் ஈடுபடுவதை நாம் மிகுந்த மனவருத்தத்துடன் பார்க்கின்றோம். அப்படியாயின் நாம் பழையவைகளை மறப்பது எப்போது? புழைய சிந்தனைகளோடும் கண்ணீ ரோடும் கோபதாபங்களோடும் எவ்வளவு காலத்திற்கு இருப்பது. இது குறித்து ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என குருநாகல் மாவட்ட பேராயர் திரு சாந்தா பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
முப்பது வருடங்களாக இந்த நாடு துப்பாக்கிச் சத்தங்களையும் மனித ஓலங்களையும் செவியேற்றுவந்ததோடு மாத்திரமல்லாமல் உயிரிழப்புகளையும் சேதங்களையுமே பார்த வந்தது. அந்தப் பேரழிவு யுத்தத்திலிருந்து நாடு இப்போது தான் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த மகத்துவமிக்க சிறப்பான பணியை, சாதனையை இந்த நாட்டுக்கு ஆற்றியிருப்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களாகும். இதனையிட்டு இந்நாட்டில் வாழும் சகல மக்களும் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அச்சம் பீதியில்லாத அமைதி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடு சுபீட்சம், மறுமலர்ச்சியை நோக்கிய துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டிருக்கிறது தற்போது இந்நாட்டின் மனித உரிமைகள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவலாகப் பேசப்படுகின்றன. எழுதப் படுகின்றன. கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன இவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
புதிய சிந்தனையோடு, புதிய எதிர்காலத் திட்டத்தோடு ஒற்றுமையான தேசத்தைக் கட்டியெழுப்ப சமயத் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும் என்றும் அரசினால் பெற்றுத் தரப்பட்டிருக்கும் அமைதி சமாதானம் தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அது எம் பொறுப்பு. அதற்காக ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment