Monday, September 9, 2013

ஐ.நா முன்றலில் தீக்குளித்த செந்தில்குமார் யார்? ஏன் தீக்குளித்தார்? துப்புத் துலக்குகிறார் கி. பாஸ்கரன்

ஐக்கிய நாடுகள் அமையத்தின் முன்றலில் தீக்குளித்து இறந்த ஈழத் தமிழரான செந்தில் குமரன் இரத்தினசிங்கம் என்பவர் தமிழீழ விடுதலை போராட்டத்துக்கு ஆதரவாக தீக்குளித்தவரா? அல்லது தீபெத்திய போராட்டத்துக்கு ஆதரவளித்து தீக்குளித்தவரா? அல்லது குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்தவரா? என்பது இன்னும் கேள்விக் குறியாய் உள்ளது.

தீக்குளித்து இறந்த செந்தில் குமரனின் மரணத்தையிட்டு பல விடயங்கள் மர்மமாகவுள்ளன… தீக்குளித்து இறந்த செந்தில்குமரனின் மரணச்செய்தியை … புலியாதரவு இணையத்தளங்கள் யாவும் ‘தமிழீழ விடுதலை போராட்டத்திற்காக’ தான் செந்தில்குமரன் தீக்குளித்து உயிர் நீத்ததாக பிரபல்யப்படுத்தி செய்தியை பிரசுரித்திருந்தன. பின்பு.., அதே இணையத்தளங்களிலிருந்த இச்செய்தி நீக்கப்பட்டு அல்லது செய்தி பின்தள்ளபட்டு அதாவது முக்கியத்துவம் கொடுக்காது விட்டதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இதிலிருந்து … செந்தில்குமரனின் மரணத்தில் எதோ மர்மம் இருப்பதை நாம் அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில்…. இணையத்தளங்களில் காணப்படும் ‘மரண அறிவித்தல்’ பக்கத்தில் கூட இறந்த செந்தில்குமரன் இரத்தினசிங்கத்தின் மரணம் தொடர்பாக செய்தி எதுவும் இதுவரை பிரசுரிக்கப்படவில்லை என்பது தான் மிகவும் மர்மமாகவுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் எதுவும் புரிந்தோ, புரியாமலோ புலிகளின் சுவிஸ் கிளை இரங்கல் செய்தியை அவசரப்பட்டு அல்லது திட்டமிட்டு வெளியிட்டுள்ளது.

செந்தில்குமரன் இரத்தினசிங்கம் ஐ.நா சபை முன்றலில் ஏன் தீக்குளித்தார், எப்படி தீக்குளித்தார் என்ற விடயங்கள் சம்பந்தமாக ஜெனிவா பொலிஸார் கூட இதுவரை எதுவுமே அறிந்து கொண்டிருக்காத நிலையில்…, புலியாதரவு இணையத்தளங்களோ செந்தில்குமரன் ‘தமிழீழ விடுதலை போராட்டத்திற்காக’ தான் தீக்குளித்து இறந்தார் என்றும், எப்படி தீக்குளித்து இறந்தார்? என்பது போன்ற விபரங்களுடன், அவர் இறந்த இடத்தில் தலைவர் பிரபாகரனின் படம் இருந்ததாகவும் ‘சத்தியம்’செய்யாத குறையாக புதினம் வெளியிட்டுள்ளார்கள்.

இறந்தவர் தன் கையில் பிரபாகரனின் படத்தை ‘பச்சை’ குத்தியிருந்தவர் என்றும் கூட செய்தியொன்றை பிரசுரித்திருந்தாலும் புலம் பெயர் தமிழ்சனம் நம்பத்தான் போகின்றது. அதனால் புலியாதரவு இணையங்கள் எப்படிப்பட்ட பொய்யையும் கக்கி செய்திகளாக வெளியிடலாம் என்பதை அறிந்தே வைத்துள்ளார்கள்.

சுவிஸிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் தீக்குளித்தவரின் பக்கத்தில் புலிசிப்பாய் ஒருவரின் படமும், அத்தோடு தீபெத்துக்காக தீக்குளித்தவர்களின் ஆவணங்களும் காணப்பட்டதாக தான் செய்தி வெளியிட்டுள்ளது.

(தீக்குளித்தவரின் பக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘புலிசிப்பாயின் படம்’ பிரபாகரனின் படமென புலிப்பினாமி இணையதளங்களங்களில் செய்தி போட்டுள்ளார்கள். சிலநேரம் தீக்குளித்தவரின் பக்கத்தில் பிரபாகரனின் படத்தை கொண்டு போய் போட்டார்களோ தெரியவில்லை…??!!

(என்னதான்.., நீங்கள் தீக்குளித்தாலும் சரி, சுடுதண்ணியை அள்ளி குளித்தாலும் சரி இந்த புலிப் பயங்கரவாத போராட்டத்தை ஜ.நா. சபையினர்கள் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என ஐ.நா.மனிதவுரிமை ஆணையாளர் நவிநீதம்பிள்ளையே கூறியுள்ளார் என்பதை புலியாதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஈழத்தமிழர்களுக்காக யாராவது தங்கள் இன்னுயிர்களை காணிக்கையாக்கும் பொழுது.., புலியாதரவு சக்திகள் அவற்றுக்காக உரிமை கொண்டாடுவதென்பது ‘விழலுக்கு இறைத்த நீராக’ போகும் என்பதையும், இவ்வுயிர்களின் தியாகம் வீணடிக்கப்படும் என்பதையும் புலிசார்பு சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்)



மூன்று பிள்ளைக்காரன், 14 வயதில் சுவிஸ் வந்து, படித்து நல்ல நிலையில் இருந்த ஒருவரான செந்தில்குமரன் இரத்தின சிங்கம் தீக்குளித்து உயிரை மாய்பதற்கான காரணமென்ன? தலைவர் பிரபாகரன் இறந்ததிலிருந்து.. தலைவர் மீது அதீத பற்றுக்கொண்ட பலபேரின் மனோநிலை பாதிப்புக்குள்ளாகி, அவர்கள் சித்தப்பிரமை பிடித்து அலைவதாக நாம் அறிந்துள்ளோம். அந்தவகையில் செந்தில்குமரன் இரத்தினசிங்கமும் மனோநிலை பாதிப்புக்கு உள்ளாகியிருந்தவரா?

தீக்குளித்தவர் யார், அவர் எந்த நாட்டு பிரஜை, அவர் எந்த வதிவிடம், என்ன பெயர் என்பது போன்ற விபரங்கள் ஜெனிவா காவல்துறையினருக்கே தெரியாத நிலையில்…, தீக்குளித்தவர் சம்பந்தமான முழு விபரங்களும், படமும் புலிப்பினாமி (லங்காசிறி குழுமங்கள்) இணையத்தளங்களில் எப்படி வெளியாகின.? இந்த தீக்குளிப்பு சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா?


இச்சம்பவம் தொடர்பாக புலியாதரவு இணையத் தளங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் நாம் பார்க்கின்ற போது.., இது மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாக தான் தெரிகின்றது். புலிகள் அமைப்பை பற்றி கடுமையான தொனியில் விமர்சித்து ஜ.நா.சபை மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் கூறியதால் ஏற்பட்ட தாக்கத்தை திசைதிருப்பும் ஒரு நடவடிக்கைக்காக, புலிகள் திட்டமிட்டு செந்தில்குமரனை பலியாக்கினார்களா?

கடைசிக்கட்ட போர் நடைபெற்ற 2009 இல், இப்படித்தான் முருகதாசனையும் புலிகள் திட்டமிட்டு ஐநா முன்றலில் தீக்குளிக்க வைத்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது…

சரி விடயத்துக்கு வருவோம்.., தீக்குளித்தவர் உண்மையில் ஈழத் தமிழர்களின் போராட்டம் சார்பாக தீக்குளித்திருந்தால், இச்செய்திகளை பிரபல்யபடுத்தி பிரசுரித்த (லங்காசிறி) இணையத்தளங்கள், இச்செய்தியை தங்கள் இணையத் தளங்களிலிருந்து நீக்கியதன் அல்லது செய்தி பின்தள்ளபட்டு அதாவது முக்கியத்துவம் கொடுக்காது விட்டதன் பின்னணியென்ன?

பொலிஸாரின் விசாரணைகளுக்கு இவர்களும் உட்படுத்தப்பட்டுள்ளார்களா? (தீக்குளித்த செந்தில்குமரன் இரத்தின சிங்கம் சம்பந்தமாக செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்களிலிருந்து இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்)

தீக்குளித்த செந்தில்குமரன் இரத்தினசிங்கம் என்பவர் தமிழீழ விடுதலை போராட்டத்திற்காக தீக்குளித்தவர் என்றால், சாதரணமாக.. ஜ.நா.முன்றலில் ஒரு இரங்கல் கூட்டத்தையோ அல்லது அஞ்சலி கூட்டத்தையோ சுவிஸில் உள்ள புலிசார்பு அமைபப்புகள் நடத்தாமல் இதுவரை மௌனம் காப்பதேன்??:. எல்லாமே மர்மமாகவுள்ளது.. உண்மையில் என்ன நடந்தது என்பதை மிகவிரைவில் அறிந்து வாசகர்களுக்கு அறியத் தருவோம் என்பதை அறியத் தருகின்றோம்.

புலியாதரவு இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்ட செய்தியிது.. முதலில் இந்தச் செய்தியை வாசியுங்கள்.. பின்னர் செய்தியின் பின்னணியை பார்ப்போம்....

ஜெனிவாவில் சோகம். தமிழீழ விடுதலை போராட்ட நெருப்புக்கு தன் உடலைக் கொடுத்த செந்தில் குமரன்! நேரில் கண்ட சாட்சியம். ஜெனிவாவில் உள்ள தமிழர் கிருஷ்ணா வெளியிட்ட செய்தியில் கீழ் கண்டவாறு கூறப்பட்டிருந்தது.

சற்று முன் சில நண்பர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஐ. நா முன்றலில் அந்த தோழர் தீக்குளித்த இடத்தில் அவர் யார், இன்னார் என்ற அடையாளங்கள் ஏதும் அறியாமலே மலரஞ்சலி செலுத்தி விட்டு நின்றிருந்தோம். அருகே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரபு தேசத்து இளைஞர்கள் அதிகாலை நடந்த, தாங்கள் கண்ட, அந்த சம்பவத்தை எங்களிடம் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பன்னிரண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு பாட்டிலில் இருந்து அடர்த்தியான ஜெல்லி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான்!

கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான். ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமேண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான்.

பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும், காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள். எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்!

இதற்கு இடையில், சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான், ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது.

இவ்வாறு குழம்பிய நிலையில், அது யாராக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்க்கொடை செய்தவனுக்கு வீரவணக்கம் செய்வதில் தவறில்லை என்று மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்தில் நின்றிருந்த போது, ஒரு தமிழ் இளைஞர் சற்று பதட்டத்துடன் காரில் வந்து இறங்கினார். அவருடன் அவர் மனைவி, மற்றும் ஒரு யுவதி மேலும் பிள்ளைகள் வந்திருந்தார்கள்! காரில் வந்து இறங்கிய இளைஞர் தன் மச்சினனை நேற்று இரவில் இருந்து காணவில்லை, காரில் இருக்கும் யுவதியின் கணவன்தான் அவன், வயது 34, அவன் தீவிர ஈழ உணர்வாளன். இங்கே ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்து பக்கத்து மாகாணத்தில் இருந்து வருகிறோம். தீக்குளித்தவரை யாராவது பார்த்தீர்களா என்று எங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தன்னோடு கொண்டு வந்திருந்த அவருடைய மச்சினன் படத்தையும் நீட்டினார்!

நான் முன்பே இறந்த அந்த தோழரின் உடலை பார்த்து இருந்ததால், காரில் இருந்த இரு யுவதிகளின் தவிப்பையும் , குழந்தைகளின் ஏக்கத்தையும் பார்த்தவாரே, அவர் கொண்டு வந்திருந்த வீசா புகைப்படத்தை எட்டி பார்த்தேன், அதிர்ச்சி நெஞ்சில் இடியாய் இறங்கியது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கும் துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை. ஆம், தமிழீழ விடுதலை போராட்ட தீக்கு தன்னுடலையும் தின்ன கொடுத்து விட்டான், செந்தில் குமரன்!!! —

சிவலோகநாதன் என்பவரால் திட்டமிட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு , ஒலிபரப்பிய பொய் கதைகளை கொஞ்சம் கேளுங்கள்.. (ஒலி வடிவம் இணைப்பு)



மேலே நீங்கள் வாசித்த, ஒலிப்பதிவில் கேட்ட செய்தியின் முக்கியமான விடயங்களை மட்டும் சற்று அலசி ஆராய்ந்து பார்ப்போம்…


// எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்!// இப்படி… உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரபு தேசத்து இளைஞர்கள் ஜெனிவாவில் உள்ள தமிழர் கிருஷ்ணாவுக்கு சொன்னவர்களாம். அங்கு நின்ற அரபு தேசத்து இளைஞர்களுக்கு புலித்தலைவர்கள் யாரையாவது தெரியுமா? இதற்கு முதல் இராணுவ உடையில் தமிழ் தலைவர்கள் யாரையாவது பார்த்திருப்பார்கள் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது புலிகள் அணியும் இராணுவ உடையின் நிறமாவது அவர்களுக்கு தெரிந்திருக்குமா? அரபு தேசத்து இளைஞர்கள் எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் ‘தமிழர்களின் தலைவர்’ ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று கிருஸ்ணாவுக்கு சொன்னதாக சொல்லுவது பச்சைப் பொய்யாகும்.//

//இதற்கு இடையில், சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான், ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது.// தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் தீக்குளித்தவரின் பக்கத்தில் இருந்ததாகவோ அல்லது இறந்தவர் தீபெத்தியர் என்றோ சுவிஸ் காவல்துறை எந்தவொரு ஊடகத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை என்பதோடு .., இறந்தவர் அடையாளம் தெரியாதவர் என்றே ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.. ( இதெல்லாம் இந்த புலிப்பினாமிகளின் கட்டுக்கதையாகும்.) இச்செய்திகளை பிரசுரித்த SWISS ஊடகங்களின் லிங்கை கீழே இணைத்துள்ளோம் நீங்களே அழுத்திப் பாருங்கள்…

http://www.24heures.ch/homme-s-immole-place-nations/story/12911413

இதைவிட பெரிய பகுடி இததான்.. இறந்த செந்தில்குமரன் தன் மனைவிக்கும் மச்சினனுக்கும் தெரியாமல் இரவில் எங்கோ காணாமல் போய் விட்டாராம்… அதனால.., காணமல் போனவரை பற்றி பொலிஸாரிடமும் கூட அறிவிக்காமல், அவர் எங்கு போனார்? என்று கூட தேடிப் பார்க்காமல், யாருக்காவது தெரிந்தவர்களுக்கு கூட ரெலிபோன் போட்டு விசாரிக்காமல்.., மனைவியும் மச்சினனும் விடியக்காலை எழும்பி பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு காரில் ஏறி நேராக ஜெனிவாவுக்கு வந்து.. ஐ.நா.சபைக்கு முன்னால் நின்ற கிருஸ்ணாவிடம் காணாமல் போனவரின் படத்தைக் காட்டி தீக்குளித்து இறந்தவர் எங்கட ஆளா? என்று பார்க்கும்படி கேட்டனராம்…

அவர் அந்தப் படத்தை பார்த்தவுடன் தீக்குளித்தவர் இவர் தான்.. இவர்தான்.. என அதிர்ச்சியுடன் சொன்னவராம். அப்படியானால்.., கணவர் தீக்குளிக்க ஜெனிவாவுக்கு போயுள்ளார் என்பது மனைவிக்கும், மச்சினனுக்கும் முன்பே தெரிந்திருக்கின்றது என்பது தான் இந்தக் கதையிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. அல்லது இப்படிபட்ட கதையொன்றை புலிப்பினாமிகள் புனைந்து தங்கள் சார்பு இணையங்களில் பிரசுரித்து புலிப்போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதற்கு முனைகின்றார்கள் என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

எது எப்படியாகினும் பொலிசாரின் விசாரணையில் எல்லா உண்மைகளும் மிகவிரைவில் வெளிவரும். அப்போது நடந்தவைகள் யாவை என்பன பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளலாம். அதுவரை பொறுத்திருங்கள்…

முக்கியமாக.. தீக்குளித்தவரின் மனைவி பிள்ளைகள், சகோதரங்கள், நன்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு இச்செய்தி துக்கத்தை தரலாம். ஆனால்.., இச்செய்தியானது இரு பகுதியினர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட செய்தியாக இருந்திருக்கும்.

முதலாவது பகுதி யார்: புலியாதரவு அமைப்புகள், புலியாதரவு ஊடகங்களுக்கு இப்படியான இழவுகள் ஒருவகையில் முக்கியமான நீயூஸ் தான். இப்படியான அவலமான இறப்புகளின் மூலம் கிடைக்கப் பெறும் ‘இரக்கத்தை’ மூலதனமாக முதலீடு செய்து தான் இனிவரும் காலங்களில் புலம்பெயர் புலிகளமைப்பினர்கள் புலியாதரவாளர்களின் ஆதரவை தேடிக் கொள்ளவும், தங்களின் பிழைப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொள்ள முடியும். அந்தவகையில் இப்படிப்பட்ட அவலமான இறப்புகளினால் பலனடைகின்றவர்கள் ஒரு சாரர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இரண்டாம் பகுதி யார்: யாராவது மரணமடைந்தால் சவப்பெட்டி கடைக்காரர்களுக்கு சந்தோசம் வருவதுபோல்…, ஈழத்தமிழர்களின் சார்பாக யார் தீக்குளித்து இறந்தாலும்.., அந்த அவல மரணத்தையிட்டு சந்தோசப்படக் கூடியவர், அந்த இறப்புக்கு உரிமை கோரக்கூடியவர், உடனடியாக இரங்கல் அறிக்கைவிட அல்லது வீரவணக்கம் தெரிவிக்க உரிமையுடையவர் ஒருவர் இருக்கின்றார்.

அவர் தான் எங்கட கோபால சாமியார்… நீங்கள் யாராவது தீக்குளித்து இறக்க விரும்புகிறீர்களா? உங்களின் மரணத்துக்கு கோபாலசாமியாரின் வாயால் ‘வீரவணக்கம் ’ தெரிவிக்கப்படும் என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு அறியத் தருகின்றோம். கோபால சாமியார் உயிருடன் இருக்கும் வரைதான் இச்சலுகைகள் கிடைக்குமென்பதால்.., சலுகையை பெற்றுக் கொள்ள முந்துங்கள்.

கோபாலசாமியாரின் வாயால் ‘வீரவணக்கம் ’ பெறுவது என்ன சாதாரண விடயமா? தலைவரால் மாமனிதர் பட்டம் பெறுவதற்கு சமமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று சீமானின் திருமணவீடு நடக்கவிருக்கின்ற இந்நேரத்தில் இப்படியொரு, ஈழத்தமிழ் உணர்வாளன் ஒருவனின் அவலச்சாவு நடைபெற்றுள்ளதால், சீமான் தனது திருமணவீட்டு நிகழ்வை தள்ளி வைப்பார் என நாம் நம்புகின்றோம்.. (நடக்கின்ற கதையா??…)

(அப்படி நடந்தால்.., சீமான் உண்மையான தமிழ் உணர்வாளன், பற்றாளன் தான் என்பதை உலகத்தமிழினம் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் சீமான் தரப்பினர்களுக்கு அறியத் தருகின்றோம். தமிழீழத்துக்காக இங்கே ஈழத்தமிழன் ஒருவன் தன்னுயிரை ஈர்த்துள்ளான். இந் நேரத்தில் ஈழத்தமிழர்களின் மேல் அதீத பற்றுக்கொண்ட சீமான் தனது கல்யாண விழாவை கொண்டாடுவாரா அல்லது ஈழத்தமிழனின் இன்னுயிருக்கு மதிப்பளித்து தனது கல்யாண வீட்டை நிறுத்துவாரா என்பது இன்று தெரியும்.

கோபாலசாமியின் கண்ணீர் காணிக்கை… (அறிக்கை)

தமிழீழத்துக்கான நீதி கேட்டு ஜெனீவாவில் செந்தில்குமரன் தீக்குளித்தார் – வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஈழத் தமிழ் இளைஞன் செந்தில்குமரன், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டு, தமிழீழத்துக்கான நீதி கேட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளார். பிரபாகரனின் திருவுருவப் படத்தை ஏந்தியவாறு சென்று முழக்கமிட்டு பின்னர் மரண நெருப்புக்குத் தன் உயிரைத் தந்துள்ளார்.

உலகிலேயே நாதியற்றுப் போன இனம் தமிழினம் தானா? இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் தான் பலியாவதோ? என்று தமிழகத்திலும், தரணியெங்கும் உள்ள தமிழர்கள், குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க வேண்டுகிறேன்.

தமிழீழத்தில் பிறந்து எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஜெனீவாவிலே தன் உயிரைப் பலியிட்டுக் கொண்ட செந்தில்குமரனுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீக்குளித்தவரின் மனைவிக்கே இச்செய்தி கிடைக்க முன்பு.., கோபால சாமிக்கு இச்செய்தி அனுப்பபட்டு, உடனடியாக அவரின் வீரவணக்க செய்தியும் பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இச்செய்தி சீமான், நெடுமாறன் போன்றோருக்கு அறிவிக்கப்படவில்லை போலும்… அதனால் அவர்கள் இச்செய்தி சம்பந்தமாக எந்தவித அறிக்கை எதையும் இதுவரை வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.

-கி.பாஸ்கரன் - சுவிஸ்


No comments:

Post a Comment