சம்பந்தனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இல்லையேல் சிங்களவர் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும்! பொதுபலசேனா
இலங்கையில் பிரிவினைவாதத்தை தூண்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள சம்பந்தனை பாராட்டிக்கொண்டிருக்காது, உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் இல்லையேல் எதிர்காலத்தில் சிங்கள மக்கள் தமது உரி-மைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக தேரர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு என்பது இந்நாட்டின் பிரிக்கப்பட்ட தனி பிரதேசங்கள் அல்ல. அவை இலங்கையின் தன்னாதிக்கத்திற்கு உட்பட்டவை. எனவே, சம்பந்தன் இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயரை போல் நாட்டை வடக்கு, கிழக்கு என தனிமைப்படுத்தி பேசுகிறார்.
அத்தோடு ‘தன்னாட்சி அதிகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச தயார்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் தலைக்குள் இன்னும் பிரிவினைவாதம் இருப்பது வெளிப்படுகிறது.
30 வருட கால யுத்தம் எமது வாழ்வை அழித்து விட்டது. அரசியல்வாதிகள் எடுத்த பிழையான தீர்மானங்களால் பல அழிவுகளை சந்தித்தோம். பயங்கரவாதத்தை அழித்து, ஒழித்து கட்டிய நாம் தற்போது வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ நாம் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தின் பிரிவினைவாத யுத்தத்தையே தோல்வி அடைய செய்தோம். இவ்வாறான ஒரு நிலையில் சம்பந்தன் தன்னாட்சி அதிகாரம் தமக்கு தேவை என கூறியுள்ளமை அரசியல் அமைப்பை மீறும் செயலாகும்.
எனவே அவருக்கு பாராளுமன்றத்திற்கு வரும் அருகதை இல்லை. அவர் இலங்கையின் சட்டத்தை மீறியுள்ளார்.
எனவே, சட்டத்தை மீறிய சம்பந்தனை அரசாங்கம் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்தியா, மொறக்கோ, ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து இங்கு வந்த முஸ்லிம்களும் உரிமைகளை கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு தமிழ் முஸ்லிம்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமானால் சிங்களவர்கள் எங்கு போவார்கள். இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் சிங்களவர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான ஓர் நிலைமை உருவாகும்.
எனவே, அரசாங்கம் நாட்டையும், சிங்கள மக்களையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment