Friday, September 6, 2013

புலிகள் மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்ற கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கைக்கு பலதரப்பும் கண்டனம்!

விடுதலைப் புலிகள் யுத்தகாலத்தில் போர்க்குற்றம் புரிந் ததாகவும், அந்தப் போர்க்குற்றங்களுக்காக விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் மீதும் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கைக்கு இப்போது பல்வேறு மட்டங்களில் இருந்தும் கண்டனங்கள் கிளம்பியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளையும் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரியுள்ளதை பிரபல சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் மிகவன்மையாகக் கண்டித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய தலைமைகளின் கையாலாகாத அரசியல் வேலை முறைகளாலும், தொலைநோக்கும் தீர்க்கதரி சனமும் அற்ற தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் அவர்களின் உத்திகளால் உணரச்சியேற்றப்பட்ட இளைஞர்களின் உயிரைப் பணயம் வைத்த ஒரு நேர்மையான போராட்டமே ஈழப் போராட்டமாகும்.

இதன் இறுதிக் கட்டத்தில் அரச படைகளிடம் சரணைடைந்த ஏறத்தாழ பதினையாயிரம் அப்பாவிப் போராளிகளில் 14 ஆயிரம் போராளிகள் வரையில் இப்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், அதுவும் விடுதலைப் புலிகளின் தலைமையும் அழிக்கப்பட்ட தொரு சூழ்நிலையில், விடுதலைப் புலிகளையும் போர்க்குற்ற விசாரணைக்கு ஐ,நா.சபை உட்படுத்த வேண்டுமென கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரியுள்ளது தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு பகிரங்க காட்டிக் கொடுப்பு என சட்டத்தரணி ரெங்கன் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் களை மீண்டும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த இந்த கோரிக்கை இடமளிக்குமெனவும், ஐ.நா. சபையிடம் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை விடுத்திருப்பதானது, இலை மறை காயாக உள்ள விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களையும் விசாரணைக்கு இழுத்துவந்து எமது இனப்பிரச்சினையைத் தீர்வின்றி இழுபட வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டுமல்லாது தடுப்புக் காவலில் நீண்டகாலமாக விசாரணையின்றி உள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்களின் விடுதலையையும் இது தாமதப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் புலிகள் இயக்கம் உருவாகக் காரணமான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளேயன்றி புனர் வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட அப்பாவி விடுதலைப் புலி உறுப்பினர்கள் அல்ல எனத் தெரிவித்த சட்டத்தரணி ரெங்கன், கூட்டமைப்பினரின் இந்தத் தேர்தல் விஞ்ஞாபன கோரிக்கைபற்றி பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்தி அதனை இலங்கை அரசிடமும், சர்வதேச சமூகத்திடமும் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com