நவிபிள்ளை எந்த நடவடிக்கையினை எடுத்தாலும் இலங்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப் போவதில்லை - பொதுபலசேனா
2300 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட எம் நாட்டிற்கு நவ நீதம்பிள்ளை பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டாலும் அதில் இலங்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப் போவதில்லை என பொது பலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் கருத்தில் கொள்ளவில்லை. இலங்கை இராணுவத்தினர் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றியதே சர்வதேசத்திற்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தவறாகத் தெரிகின்றது.
மேற்குலக நாடுகள், விடுதலைப் புலி இயக்கம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆசையினை நிறைவேற்றும் வண்ணமே மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் செயற்படுகின்றார். சிங்களவர் தமிழர் ஒற்றுமையாக வாழும் தற்போதைய சூழலினை மீண்டும் பிரித்து நாட்டில் மீண்டுமொரு பிரிவினைவாத யுத்தத்தினை ஏற்படுத்த நவநீதம்பிள்ளை நினைத்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா செய்யும் நாசகாரச் செயற்பாட்டினை இலங்கையிலும் மேற்கொண்டு, இங்கு மூவினத்தவர் மத்தியிலும் விரோதத்தினை ஏற்படுத்த நினைத்தால் அதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.
மேலும் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தில் அவர் எமது நாட்டில் அமைதிச் சூழலை நன்றாகவே அறிந்திருப்பார். இன்று யாரும் நாட்டில் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக போகக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலை ஏற்படுத்த இராணுவ வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளமையினையும் யாரும் மறந்துவிடக் கூடாது.
நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்கின்றோம். இதை சர்வதேச நாடுகள் குழப்ப நினைத்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனவும் நவநீதம்பிள்ளை பக்கச் சார்பாக செயற்படாது நியாயமான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
1 comments :
She has a barrage of works in regard to huge human rights violations around the world.In comparision Srilanka is just a peanut matter
Post a Comment