தேர்தல் வாக்குறுதியை கேட்டு சிரிக்காமல் என்ன செய்ய?
இராணுவத்தை வெளியேற்ற எமக்குப் பலத்தைத் தாருங்கள் என்று வழக்கம்பரையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன். இவர்தான் முன்பு நீதிபதியாக இருந்து தீர்ப்புகள் வழங்கியவர் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.
மக்களை ஒன்றும் புரியாத முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? இவர்கள் வென்றவுடன் இராணுவம் எப்படி வெளியேறும்? இராணுவத்தை வெளியேற்றுவதற்கு அப்படி என்ன வெளியே சொல்ல முடியாத இரகசியத் திட்டம் வைத்திருக்கிறார்கள்?
சரி, இதற்கு முந்திய தேர்தல்களில் எல்லாம் இவர்கள் வெல்ல வில்லையா? ஏன் இராணுவத்தை வெளியேற்றவில்லை? இந்தத் தேர்தலில் 30 ஆசனங்களுக்கு மேல் கிடைத்தால் இராணுவத்தினரை வெளியேற்றி விடலாம் என்று மக்களை ஏமாற்றுகிறார் முன்னாள் நீதிபதி.
இராணுவத்தை வெளியேற்றும் அதிகாரம் மாகாணசபைக்கு உண்டா? மாகாண சபையால் தீர்மானம் நிறைவேற்றி படையினரை அனுப்பிவிடலாம் என்பது கேட்கிறவர்களை முட்டாள்களாக்குகிற கதையல்லாமல் வேறென்ன? பொலிஸ், காணி அதிகாரங்கள் கூட இல்லாத அரைகுறை அதிகாரங்கள் கொண்ட மாகாண சபை, இதை நாம் ஆரம்பமாகக் கூட ஏற்கவில்லை என்று இந்த அப்புக்காத்துகள் தானே சொல்லிவந்தார்கள்! இப்போது மாகாணசபையைப் பிடித்து இராணுவத்தை வெளியேற்றுவது எப்படி என்ற வித்தையை மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டாமா?
எல்லாவற்றுக்கும் எங்களிடம் இரகசியத் திட்டம் இருக்கிறது என்று எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது? இதுவரை காலமும் தமிழ்மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுவந்தவர்கள் இவர்கள்தானே? வெல்வதற்கும் வென்றபின்னும் மக்களுக்கு வீரவசனங்கள் பேசினார்களே தவிர, படையினரை விலக்க வேண்டுமென்பதற்காக ஒரு சிறு தியாகத்திற்குக் கூட முன்வந்ததில்லை.
இவர்கள் வெளிநாடுகளெல்லாம் சென்று இந்த நாட்டுக்கும் ஜனநாயக தேர்தல் முறையால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்துக்கும் எதிராகப் பேசிக்கொண்டே சவால் விட்டுக்கொண்டே எப்படி இராணுவத்தினரை இங்கிருந்து கிளப்ப முடியும்? அது முடியா தென்று ஒரு சிறு பிள்ளைக்குக் கூட விளங்குமே!
இந்த நாட்டில் உள்ள ஏனைய இனங்களுடன் இணங்கி வாழ்வதற்கும், பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாம் மனப்பூர்வமாகத் தயாராயிருப்பதை உணர்த்துவதன் மூலம்தான் இராணுவ விலகலுக்கான சூழ்நிலைமையை ஏற்படுத்த முடியும். அத்தகைய இணக்க நடைமுறையை பின்பற்றுகிறவர்கள் வைத்தகோரிக்கைக்கு இணங்கித்தான் அரசாங்கமும் படையினரைப் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் கால அட்டவணையைத் தயாரிக்க இணங்கியிருக்கிறது.
இணக்க நடைமுறையைப் பின்பற்றுகிறவர்கள் மாகாண ஆட்சியைப் பிடிப்பார்களாக இருந்தால், அரசாங்கம் இங்கு படையினரின் இருப்பை வெகுவாகக் குறைத்துவிடும் என்பதை எவருக்கும் புரிந்துகொள்ள முடியும். அதுவேயதார்த்தமும் சாத்தியமும் ஆகும். மற்றபடி எதிர்த்துச் சவால் விட்டு வசனங்கள் பேசியெல்லாம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தலாமே தவிர, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
இந்தத் தேர்தல் தமிழ் மக்களையெல்லாம் போர்வீரர்களாக மாற்றப் போகின்றது. அந்த ஒரு புள்ளடிதான் உங்கள் ஆயுதம் என்றும் கூட்டத்தில் அந்த முதன்மை வேட்பாளர் பேசியிருக்கிறார். மக்களுக்கு வீரம் ஊட்டுகின்றாராம்! யார், எங்கிருந்து வந்து, என்னவெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்… சிரிக்காமல் என்ன செய்ய?
0 comments :
Post a Comment