Tuesday, September 10, 2013

புலிக்கொடியுடன் ஓடிய நபருக்கு மான்செஸ்டர் பொலிஸார் வலைவீச்சு! குறித்த நபரை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!

இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் இலங்கைக்கும் இந்தி யாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி பிரித்தானிய பொலிஸாருடன் பேசிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் சந்தேகநபரை மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது மறைந்து வாழ்வதால் விசாரணையை முடிக்க முடியவில்லை என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அன்று கொண்டுவந்தனர்.

ஆகையால், ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களான குலதீபன் மற்றும் உதயனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அன்று அனுமதி கோரியிருந் தனர்.

இதேவேளை, புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய ஜூலை மாதம் 30 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார். அவருக்கு எதிரான வழக்கு ஜூன் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற் கண்டவாறு உத்தரவிட்டிருந்தார்.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜூன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை ஜுலை 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.

இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்தால் கைது செய்யுமாறு ஜூன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.

புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கு விசாரணை செப்டெ ம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com