பௌத்த கொடியை நீக்கிவிடுங்கள் என்று நான் சொன்னேன் என்பது உண்மை! – பிள்ளை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, சுதந்திர சதுக்கத்தில் ஏற்றப்பட்டுள்ள பௌத்த கொடியைப் பற்றி மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிட்ட போதும், டீ.எஸ்.சேனாநாயக்காவின் சிலை தொடர்பில் எவ்வித கருத்தினையும் முன்வைக்கவில்லை என ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது இலங்கை பயணத்தின் போது, சுதந்திர சதுக்கத்திலுள்ள டீ.எஸ். சேனாநாயக்காவின் சிலை தொடர்பில் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை என்பதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம் என மனித உரிமைகள் ஆணையகத்தின் ஊடகப் பேச்சாளர் ரூபட் கொல்வில் அறிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வெகுவிரைவில் எழுத்துவடிவிலான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ரூபட் கொல்வில் மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது சுதந்திர சதுக்கத்திலுள்ள பௌத்த கொடி தொடர்பில் அவர் வினாதொடுத்ததாகவும் அம்மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திரம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் முடிவினை அனைத்து மக்களுக்கும் எடுத்தோதும் ஒரு இலச்சினையாகவுள்ள சுதந்திர சதுக்கத்தில், ஒரு மதத்தை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய கொடி பற்றி தான் வினவியதாகவும், இலங்கைவாழ் ஏனைய மதத்தினர் இவ்விடயம் தொடர்பில் அதிருப்தியடையக்கூடிய நிலையுள்ளதாகவும் தெளிவுறுத்தியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமையகம் சுட்டிக் காட்டியுள்ளது.
சுதந்திர சதுக்கத்தில் பௌத்த கொடிக்குப் பதிலாக அனைத்து இனங்களையும் ஒருமைப்படுத்தக்கூடிய இலச்சினையான தேசிய கொடியைப் பறக்கவிடலாமே என அரசாங்கத்திடம் கருத்துரைத்ததாகவும் நவநீதம்பிள்ளையின் ஆணையக அறிக்கையை பற்றி ஊடகப் பேச்சாளர் ரூபட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment