ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் மாணவர்களின் முயற்சிகளுக்குப் பாராட்டு
ஸவூதி அரேபியாவை தலைமையகமாகக் கொண்ட உலக முஸ்லிம் லீக் (றாபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி) ன் கீழ் அங்கு இயங்கி வரும் ஹைஅத்துல் குர்ஆனில் கரீம் அல்-ஆலமிய்யாவின் இலங்கைக் கிளையான ஹைஅத்துல் குர்ஆனில் கரீம் நிறுவனத்தால் அகில இலங்கை ரீதியாக நடாத்திய அல்-குர்ஆன் மனனம் மற்றும் தஜ்வீத் போட்டிகளின் சகல பிரிவுகளிலும் அட்டுலுகம ஜாமிஆ மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதையிட்டு ஊர் மக்கள், நலன் விரும்பிகள், தமது மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
அது பற்றி மேலும் தெரியவருவதாவது:
மேற்படி போட்டிகள் அல்-குர்ஆனை முழுமையாக மனனமிட்ட ஹாபிழ்களுக்கு மத்தியில் சென்ற 03 ஆம் திகதியன்று நடைபெற்றது. அவற்றில் 30 ஜுஸ்உ அல்-குர்ஆன் மனனப் போட்டியில் மாணவர் முஹம்மத் பின் நஸீர் (அட்டுலுகம) என்ற மாணவன் முதலாம் இடமும், மதனுல் ஜஸரிய்யா – முழுக் குர்ஆன் மனனப் பிரிவில் முதலாம் இடத்தை அப்துல் ஹகீம் பின் ஹஸன் ஷிஃப்லி (தர்கா நகர்) என்ற மாணவரும்,கலிமாத்துல் குர்ஆன் – முழுக் குர்ஆன் மனனப் பிரிவில் முதலாம் இடத்தை றபாஹான் பின் ழபருள்ளாஹ் (மாத்தறை) என்ற மாணவரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் அல்-குர்ஆன் மனனப் போட்டியுடன் ரியாலுஸ் ஸாலிஹீன் மனனப் போட்டியில் கலந்து கொண்ட இதே கலாசாலை மாணவர் யாஸிர் பின் துவான் றஷீத் (பதுளை) மூன்றாம் இடத்தைப் பெற்றார். மேலும் அகில இலங்கை அறபுக் கல்லூரிகள் ஒன்றியம் வருடா வருடம் நடாத்தும் அறபுக் கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளிலும் கலந்துகொண்ட இக்கல்லூரி மாணவர்கள் தொடர் வெற்றிகளைப் பெற்றனர். மட்டுமல்லாது சென்ற காலங்களில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளிலும் இக்கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டு பல சாதனைகளையும், வெற்றிகளையும் ஈட்டியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவைகளுக்கு நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதுடன், இந்த மாணவர்களின் வெற்றி எமது ஊருக்கும் இக்கலாசாலைக்கும் கிடைத்த வெற்றியும் கௌரவமும் என அவர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment