Friday, September 6, 2013

கிளிநொச்சி – முல்லை மாவட்டங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகரிப்பு!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் அடங்கிய வன்னிப் பகுதியில் புற்று நோய் தாக்கத்துக்குள்ளானவர் களின் தொகை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ள தாக இலங்கை சுகாதார அமைச்சின் தகவல் ஒன்று கூறுகிறது. அதன் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தி யசாலையில் புதிதாக புற்று நோய் சிகிச்சைப் பிரிவொ ன்றை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித் துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த நோய் அதிகரிப்புக்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று, 1995.ல் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு அரச படைகளால் வெளியேற்றப்பட்ட பின்னர், அவர்கள் வன்னிப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வைத்துக் கொண்டனர். அதன் காரணமாக அங்கு வாழ்ந்த மக்களுக்கு போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதுடன், கிடைத்தவையும் போசாக்கானவையாக இருக்கவில்லை. அதனால் மக்கள் தமது பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து மாறி, கிடைக்கிறதைச் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அது அவர்களது உடலில் பல பாதிப்புகளை உண்டுபண்ணியது.

அத்துடன் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் பெரும்பான்மையான மக்களுக்குக் கிடைக்கவில்லை. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சித் தொகுதி அமைப்பாளராக இருந்த காலத்தில் (1970 - 1977), கிளிநொச்சி மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பாரிய நீர்த்தாங்கி ஒன்று அவரது முயற்சியால் கிளிநொச்சி நகரில் நிறுவப்பட்டது. ஆனால்; அந்த நீர்த்தாங்கியை புலிகள் குண்டு வைத்துத் தகர்த்து விட்டனர்.

இதுதவிர போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் பலருக்கு ஏற்பட்ட மனச் சிதையும் இந்த நோய் அதிகரிப்பதற்கான காரணிகளில் ஒன்று என வைத்திய நிபுணர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, அரச படைகளும் புலிகளும் பயன்படுத்திய மிகையான வெடிப்பொருட்களும் ஒரு காரணம் ஆகும். அவர்கள் பயன்படுத்திய பெருந்தொகையான வெடிப்பொருட்களில் அபாயகரமான, நச்சுத்தன்மையான இராசயனப் பொருட்கள் இருந்ததால், அவை பொதுமக்களின் உடலில் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணியாக இருந்துள்ளது. இந்த நச்சுப் பொருட்களின் தாக்கத்தால் மனிதர்கள் மாத்திரமின்றி, குடிநீர், தாவரங்கள், நிலம், மிருகங்கள், பறவைகள் என சகலதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் தாக்கம் வருங்காலத்தில் மேலும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகளான இப்பிரதேச மக்கள், யுத்தத்திற்கு முந்திய காலகட்டத்தில் தாம் விளைவித்த சுத்தமான அரிசியையும், மரக்கறி வகைகளையும், பழங்களையும், நன்னீரில் வளர்ந்த மீன்களையும் உண்டு, மிகவும் ஆரோக்கியமாகத் திகழ்ந்தார்கள்.

ஆனால் எப்பொழுது புலி பாதுகாப்புத் தேடி அங்கு பதுங்கியதோ, அதைத் தேடி எப்பொழுது சிங்கங்கள் வேட்டையாடப் புறப்பட்டனவோ, அன்றே அந்த மக்களின் வாழ்வுக்கு உலை வைக்கப்பட்டுவிட்டது.

அரசு புலிகளை அழித்து போரில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அந்த மக்கள் இழந்த தமது உறவுகளையும் வாழ்க்கையையும் மீளப்பெற முடியாமல் தோல்வியடைந்து உள்ளார்கள்.

இந்த நிலைமையில் இப்பொழுது அவர்களுக்கு போரில் ஈடுபட்ட இரு பகுதியினரும் சேர்ந்து புற்றுநோயை இன்னொரு பரிசாக அளித்திருக்கிறார்கள்.

இரத்தினம்

No comments:

Post a Comment