Friday, September 27, 2013

விக்னேஸ்வரன் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற போகின்றாராம் - சம்பிக்க!

வடக்கு வாழ் மக்களிடம் இறந்தவர்களை பற்றிய இருண்ட நினைவுகளை மீட்டதன் மூலம் வடமாகாணத்தில் ஒரு சுதந்திரமான நீதியான தேர்தல் நடப்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளையின் வடக்கு விஜயம் தடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

வட மாகாண தேர்தலின் போது இந்தியாவும் ஏனைய நாடுகளும் இனவாதத்தை கிளப்பியதாக ஜாதிக ஹெல உறுமய உறுப்பினரும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த சர்வதேச சக்திகள் தமது தலையீடுகள் மூலம் இந்த நாட்டின் அமைதி ஏற்படுவதை தடுத்தன. வடக்குக்கு சென்ற நவி பிள்ளை அந்த மக்களுக்கு யுத்தத்துடன் தொடர்பான பழைய துன்பமான நிகழ்வுகளை ஞாபகப்படுத்திய தாகவும் இதனால் வடக்கில் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற உதவியது' என அவர் கூறினார்.

சண்டை நடந்தபோது வட பகுதி மக்கள் பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியமாதிரி வாக்களித்தனர். ஆனால் இப்போது அவர்கள் பரீஸிலிருந்தும் ரொறன்ரோவிலிருந்தும் வரும் தெலைபேசி அழைப்புகளுக்கு பயந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர் என அவர் மேலும் கூறினார்.

ஆயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாளத்துக்கு ஏற்ப நாம் நாட்டின் அரசியலை ஆட விடப்போவதில்லை. ஈழத்துக்கான யுத்தம் கொழும்புக்கும் வரும். சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்றுவார் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

இவர்கள் பிரபாகரனின் அரசியல் யுத்தத்தை முன்னெடுக்கின்றனர். இது குரங்கு கத்தியை எடுத்தது போலாகும் என ரணவக்க கூறினார். பிரபாகரன் விட்ட இடத்திலிருந்து விக்னேஸ்வரன் இந்த அரசியல் போராட்டத்தை தொடக்குவார் என ஜாதிக ஹெல உறுமய உறுபினர் உதய கமன்பில கூறினார். இந்த புலிகள் பிரபாகரன் காலத்து புலிகளைவிட ஆபத்தானவை மற்றும் பொல்லாதவை எனவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட யாவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் கீழ் வேலை செய்தவர்கள் எனவே ஈழயுத்தம் தற்போது இராஜதந்திர ரீதியான இலக்காகியுள்ளது என்றும் கமன்பில கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com