Wednesday, September 11, 2013

கதிகலங்கிய குற்றவாளிகள்! தண்டனையை அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி!!

டெல்லி மாணவி வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வெள்ளியன்று தண்டனை அறிவிக்கப்படும் என்று டெல்லி சாகெட் விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

டெல்லி மருத்துவ மாணவி வழக்கில் குற்றவாளிகள் அனைவர் மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், இன்று காலை டெல்லி சாகெட் விரைவு நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. இதில் வாதாடிய மாணவியின் தரப்பு வழக்கறிஞர், கல்லூரி மாணவியை மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் ஊடகங்கள் தான் பெரிதாக்கிவிட்டன என கூறி தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் குற்றவாளிகள் தரப்பில் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க கூடாது என்றும், அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரே மாதிரியான தண்டனை என்பதை ஏற்க முடியாது என குற்றவாளிகள் தரப்பில் வாதம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு குறித்த விவாதம் இரு தரப்பிலும் நீடித்ததால், நீதிபதி குற்றவாளிகளுக்கான தண்டனையை அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தார். கொடூரமான இந்த குற்றவாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என அரசு தரப்பிலும், பொதுவாக பாலியல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் படுவதே வழக்கம் எனவும், தூக்கு தண்டனை என்பது அதிகப்படியான ஒன்று எனவும், எதிர்தரப்பிலும் வாதம் செய்யப்பட்டது.

ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும், அப்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு காயப்படுத்தி யுள்ளதாக நீதிபதி கூறினார். வாதங்களை கேட்ட நீதிபதி யோகேஷ் கண்ணா, மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான தண்டனை வெள்ளிக்கிழமை 2.30 மணியளவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

டெல்லியில் பிசியோதெரபி மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி அன்று ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 17வயது சிறுவன் உட்பட 6 பேர் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறார் நீதிமன்றத்தில் சிறுவனுக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 குற்றவாளிகள் மீதான வழக்கில் 130 விசாரணைகள் நடந்தது. இவர்களில் முகேஷ் என்பவர் மட்டுமே குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

No comments:

Post a Comment