Saturday, September 28, 2013

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசு எங்களுக்குத் தர வேண்டும்! இல்லையேல் சர்வதேசத்திடம் கேட்போம்! - விக்னேஸ்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள உலக நாடுகளின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள் ளப்படும் என வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றி யீட்டிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதோடு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதனை அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால், கடுமையான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைவாக நிறைவேற்றப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தில் காணி காவல்துறை அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்கத் தவறினால் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் அவற்றைப் பெற்றுக்கொள்ள நேரிடும் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காணி அதிகாரம், மாகாண சபைக்குரியது அல்லவெனவும், மத்திய அரசாங்கத்திற்கே காணி தொடர்பான அதிகாரம் இருப்பதாகவும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான கே. ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com