Sunday, September 1, 2013

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்க முடியாது – நவிபிள்ளை!

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை, பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்பாக விளங்குவதால் அடுத்த கட்ட நட வடிக்கை தொடர்பில் தெரிவிக்க முடியாதென அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவிக்கின்றார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுடன் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சந்தேகம் எழுந்திருந்தால் அந்த சந்தர்ப்பத்திலேயே ஏன் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு நவிபிள்ளை பதிலளிக்கையில், இலங்கை தொடர்பில் விசேட அமர்வு நடைபெ ற்றபோது நான் அந்த கேள்வியை தொடுத்தேன். எனக்கு யுத்தம் தொடர்பில் கசப்பான சம்பவங்கள், போர் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. நாம் எவரும் உண்மை நிலையை காணாததால் சர்வதேச விசாரணை தேவை என ஏனைய நாடுகளுடன் இணைந்து நான் கோரிக்கை விடுத்தேன் என தெரிவித்தார்.

மேலும் மனித உரிமை விடயத்தில் இலங்கை மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச சமூகமும் நீங்களும் பல தடவை கூறியிருந்தீர்கள். இந்த இலக்குகளை இலங்கை அடைந்துள்ளதா என்பதை எவ்வாறு காண முடியும் என கேட்கப்பட்ட கேள்விக்கு நவிபிள்ளை பதிலளிக்கையில், மிகவும் இலகுவானது. வீதியில் செல்லும் போது மக்கள் வெளியிடும் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும். அப்போது மக்களுக்கு எது தேவை என்பதை உணரலாம் என தெரிவித்தார்.

உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு நவிபிள்ளை பதிலளிக்கையில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் கூற முடியாது. ஏனெனில் இது பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்பாகும். நான் அதன் ஆணையாளர் என்ற வகையில் மனித உரிமைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பேன் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment