Monday, September 9, 2013

இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. குடும்ப பொருளாதார சூழல் போன்ற வையே இதற்கான காரணம் என ஐ.நா சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுவயதில் திருமணம் செய்துகொண்ட 71 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 வீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாக கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளதாக ஐ.நா சிறுவர் நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட் டுள்ளது.

சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என இலங்கைக்கான ஐ.நா சிறுவர் நிதிய வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலக நிர்வாக பிரிவுகளிலும் ஐ.நா சிறுவர் நிதியத்தின் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்படும் பிரதேசங்களிலே சிறுவயது திருமணங்களும் அதிகம் காணப்படுவதாக ஐ.நா சிறுவர் நிதியத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment