Saturday, September 14, 2013

கிளிநொச்சிக்கான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

23 வருடங்களின் பின் யாழ்தேவி பயணிகளுக்கான ரயில் சேவைகள் இன்று(15.09.2013) கிளிநொச்சி நோக்கி தனது முதலாவது பயணத்தை காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடைந்தது.


வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரை 29 ரயில் நிலையங்களின் உதவியுடன் தனது சேவையை வழங்கி வந்த யாழ்தேவி 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதியின் பின்னர் வவுனியா வரையே பயணித்தது.

தற்போது வடக்கின் துரித மீள்கட்டுமானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஓமந்தை முதல் காங்கேசன் துறை வரையான ரயில் பாதையில் தற்போது கிளிநொச்சி வரையான பகுதி ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, கிளிநொச்சி வரை யாழ்தேவியின் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

ஒமந்தையில் இருந்து கிளிநொச்சி வரை பயணித்த புகையிரதத்தில் ஜனாதிபதி தலைமையிலான அதிகாரிகள் சிலரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட வெளிநாட்டு அதிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சி வரை ரயில் போக்குவரத்து விஸ்தரிக்கப்படுவதை அடுத்து, இன்று முதல் மூன்று ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment