Sunday, September 8, 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவக இணைப்பாளர் பேணாட் மாஸ்ரர் ஈ.பி.டி.பியுடன் இணைவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளரும், தீவிர தமிழ் செயற்பாட்டாளருமான கே.எஸ்.பேணாட் மாஸ்ரர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

கூட்டமைப்பின் தீவகத்திற்கான இணைப்பாளராக கடந்த காலங்களில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த பேணாட் மாஸ்ரர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவும் பிரசாரங்களில் முனைப்பாக ஈடுபட்டு வந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனது தெரிவு மற்றும் தீவகப் பகுதியில் எவ்விதமான அபிவிருத்திப் பணிகளை இதுவரையில் மேற்கொள்ளாத கூட்டமைப்பின் மற்றுமொரு வேட்பாளருமான கனகரத்தினம் விந்தன் தொடர்பிலும் இவர் அதிருப்தி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி. சார்பாக போட்டியிடும் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன் முன்னிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து கொண்டதுடன் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேணாட் மாஸ்ரர் எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி தொடர்ந்தும் ஏமாறக்கூடாது. தீவகத்தை மட்டுமல்ல வடபகுதியை எவ்விதத்திலும் அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கான திட்டங்களோ, கொள்கைகளோ அவர்களிடம் இல்லை.

இந்நிலையில், வடபகுதியைப்பற்றியோ, மக்களது வாழ்நிலைபற்றியோ ஒன்றுமேதெரியாமலும், வடபகுதியில் வாக்குரிமை இல்லாது கொழும்பில் வாழ்ந்து வந்த விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியதில் என்ன நியாயம் இருக்கின்றது என விசனம் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com