தலைவலியை குணப்படுத்தும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர் இலங்கை வைத்தியர்கள்!
உடற்கூற்று சிகிச்சை மூலம் நீண்டகால தலைவலியை குணப்படுத்தும் புதிய முறைமையை, இலங்கையின் உடற்கூற்று சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். கலாநிதி சுஜீவ வீரசிங்க மற்றும் கலாநிதி குமார பதிரண என்ற உடற்கூற்று சிகிச்சை நிபுணர்களே இந்த புதிய முறைமையை கண்டுபிடித்துள்ளனர்.
தலைவலியினால் ஏற்படும் வேதனையை அளவீடும் முறையையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலக உடற்கூற்று சிகிச்சை சங்கத்தின் அனுமதியும், இந்த கண்டுபிடிப்பிற்கு கிடைத்துள்ளது. கழுத்துக்கு அருகில் ஏற்படும் தசைப்பிடிப்பு காரணமாக, குருதி நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தினால் மூளை, தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குருதியோட்டம் குறைவடைவதினால் இந்த நீண்டகால தலைவலி ஏற்படுவதாக கலாநிதி சுஜீவ வீரசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.
உடற்கூற்று சிகிச்சை மூலம் இந்த அழுத்தத்தை நீக்கி, குருதியோட்டத்தை சீராக்கும் முறையொன்றை கண்டுபிடித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதன் போது தலைவலியினால் ஏற்படும் வேதனையை அறிந்துகொள்ள முடியாதவொரு சிக்கல் காணப்பட்டதால், அதற்கும் புதிய முறைமையை தயாரித்ததாக கலாநிதி சுஜீவ வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
தலைவலியால் ஏற்படும் வேதனையை அறிந்துகொள்ளும் இந்த முறையின் ஊடாக, சிகிச்சையின் ஆரம்பத்தில் காணப்பட்ட வேதனையையும், இறுதியில் காணப்பட்ட வேதனையையும் கணிப்பிட முடியும் என அவர் கூறினார்.
இது தொடர்பில் தாய்வானில் நடைபெறவுள்ள உலக உடற்கூற்று சிகிச்சை சங்கத்தின் ஆசிய பசுபிக் மாநாட்டில் சர்வதேசத்தினரை தெளிவூட்டவுள்ளதாக கலாநிதி சுஜீவ வீரசிங்க தெரிவித்தார்.நீண்ட கால தலைவலியை குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை, எதிர்வரும் 7 ஆம் திகதி உலக உடற்கூற்று சிகிச்சை சங்கத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் தலைவலியின் அளவையும், நோய் அறிகுறிகளையும் கணிப்பிடும் முறையை, எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேசத்தினை தெளிவூட்டவுள்ளதாக கலாநிதி சுஜீவ வீரசிங்க குறிப்பிடுகின்றார்.
0 comments :
Post a Comment