Saturday, September 21, 2013

டான் தொலைக்காட்சிக்கு மாவை சேனாதிராஜா மிரட்டல்!

அனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்துவிட்டதாக உதயன் பத்திரிகை வெளியிட்டதாகக் கூறப்பட்ட சிறப்பு பதிப்பு தொடர்பாக வெளிவந்த செய்தி குறித்து டான் அலுவலகத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா மிரட்டல் விடுக்கும் பாணியில் அலுவலகத்தையும் அங்கிருந்தவர்களையும் படம் எடுத்துச் சென்றிருக்கின்றார்.

அதேவேளை, கார் ஒன்றில் வந்த உதயன் அடையாள அட்டைகளைத்தாங்கிய சிலர் டான் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததாக டான் உரிமையாளர் பொலிசில் முறைப்பாடு செய்திருக்கிறார். முன்னதாக அலுவலகம் வந்திருந்த மாவை சேனாதிராஜா அலுவலகத்தையும் அங்கிருந்தவர்களையும் வீடியோ கமராவில் படம் எடுத்ததுடன், அச்செய்தி குறித்து மறுப்பு வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து முன்னதாக டான் ஒளிபரப்பிய செய்தியில் தெரிவித்திருந்ததாவது:

அனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்துவிட்டதாகவும், தேர்தலைப் பகிஸ் கரிக்குமாறு மாவை சேனாதிராஜா வேண்டுகோள்விடுத்திருப்பதாகவும் உதயன் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள சிறப்பு பதிப்பில் தெரிவித்திருக்கின்றது. இந்தப் பதிப்புக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று உதயன் பத்திரிகை வெளியீட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஈ. சுரவணபவன் தெரிவித் திருக்கிறார். அனந்தி எழிலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவரது விளம்பரங்களைக்கூட உதயன் தவிர்த்து வந்த நிலையில் பலத்த அழுத்தங்களின் பின்னரே உதயன் அவரது தேர்தல் விளம்பரங்களை வெளியிட்டடிருந்தது.

சரவணபவனின் தொகுதியைச் சேர்ந்தவரான, அனந்தியின் எழுச்சியை சரவண பவன் விரும்பவில்லை என்றும் அதனாலேயே அனந்தி உதயன் பத்திரிகையில் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும் ஒருசாரார் விசனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையிலேயே அவர் கட்சி மாறிவிட்டதாக உதயன் பத்திரிகை சிறப்பு பதிப்பு ஒன்றை இன்று காலை வெளியிட்டிருப்பதாக அனந்தி தரப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இதுகுறித்து மாவை சேனாதிராஜாவிடம் கேட்பதற்காக தொடர்பு கொண்டபோது அவர் தொடர்பில் கிடைக்கவில்லை.

அனந்தி எழிலன் நேற்று நள்ளிரவு அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை சந்தித்து இரகசிய பேச்சுக்களை நடாத்தியதாகவும் அவர் வெற்றிபெற்றபின்னர் அரசுடன் இணைந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாகவும் அதனால் தமிழரசுக் கட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவுசெய்திருப்பதாகவும் உதயனின் சிறப்பு பதிப்பில் தெரிவிக்கப்ட்டிருக்கின்றது.

பின்னர் இந்தச் செய்திகளை டான் ரிவி மாவை சேனாதிராஜா, அனந்தி ஆகியோரின் மறுப்புக்களுடன் தெரிவித்திருந்தது. அந்தப் பத்திரிகையை யார் வெளியிட்டார்கள் என்பதற்கு அப்பால், அவ்வாறு ஒரு பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது என்பது முக்கியமான செய்தி என்பதால் அதனை செய்தியாக வெளியிட்டதாகவும், தமது முதலாவது செய்தியிலேயே அதனை உதயன் பத்திரிகை மறுத்திருப்பதாகவும் டான் ரிவி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com