நான் எனது மனைவிக்கு பயப்படுகிறேன் - ஒபாமா!
தனது மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்டதாக உலகின் அதிகாரம் மிக்க தலைவரான அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ஐ. நா. பொதுக்குழு கூட்டத்தை ஒட்டி நியூயோர்க்கில் சிவில் சமூகத்தின் முக்கியத்துவம் பற்றி நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தின் போது ஒபாமா இதனை தெரிவித்தார். ஒபாமாவின் கலந்துரையாடலை சி. என். என். தொலைக் காட்சி ஒளிபரப்பியது.
இதில் கூட்டம் முடிந்து எழுந்த ஒபாமாவிடம் அருகில் இருந்தவர், தனது புகைப்பழக்கம் குறித்து கேட்டார். இந்த கேள்விக்கு சிறு புன்னகை பூத்த ஒபாமா 'கடந்த ஆறு ஆண்டுகளாக நான் சிகரெட்டை பிடித்ததில்லை.
ஏனென்றால் எனது மனைவிக்கு நான் பயப்படுகிறேன்' என்றார். நீண்ட நாட்களாக ஒபாமாவுக்கு அதிக அளவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவரது தந்தையிடம் இருந்து வந்த பழக்கம் என ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அவர் படிப்படியாக மாற்றிக் கொண்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தேர்தல் பிரசாரத்தின் போது அவரது சிகரெட் பிடிக்கும் விவகாரம் குறித்து ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜனாதிபதி பதவி ஏற்ற முதல் ஆண்டு நிறைவின் போது புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து 95 சதவீதம் மீண்டு விட்டதாக தெரிவித்திருந்தார். 2010 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒபாமா கடந்த 9 மாதங்களாக சிகரெட் பிடிக்கவில்லை என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பொதுமக்களிடம் உடல் நலம் குறித்து பேசிய அவரது மனைவி மிச்செல் தனது கணவர் 2 மகள்கள் முன்பு சிகரெட்டை தொடுவது கூட இல்லை என்றார். 2011 ஆம் ஆண்டு பெப்ரவரியில் தனது கணவர் ஒபாமா ஒரு வருடமாக சிகரெட் பிடிப்பதில்லை என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment