நு.அ.ச உத்தியோகத்தர் என்ற போர்வையில் கப்பம் பெற்ற நபர் கைது!
நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர் என்ற போர் வையில் வரக்காபொலை பகுதி கடைகளிலிருந்து கப்பம் பெற்ற போலி அதிகாரி பொலிசாரால் கைது செய்யப் பட்டார்.
வரக்காபொலை, நாங்கல்ல, அம்பேபுஸ்ஸ, கனிதபுர, தும்மலதெனிய, ஹொரகொல்ல ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் இந்த போலி அதிகாரி காலாவதியான பொருட்களைத் தேடி கண்டு பிடித்து வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி ஆயிரம் ரூபா, இரண்டாயிரம் ரூபா என பல தொகைகளை கப்பம் பெற்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இதே விதமாக குறித்த போலி அதிகாரி வரக்காபொலை, கனிதபுர பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு வந்து காலாவதியான பொருள் ஓன்றைப் பெற்று வழக்குத் தொடரப் போவதாகக் கூறியுள்ளார். கடை உரிமை யாளர் இரண்டாயிரம் ரூபாவை குறித்த போலி அதிகாரிக்கு வழங்கியுள்ளார். அப்போது காலாவதியான ஒரு தொகை கறுவாடு இருப்பதாகவும், இதனை பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு எடுத்துச் செல்ல அடுத்த நாள் அதாவது நேற்றைய தினம் வருகை தருவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
இதேவிதமான நேற்றைய தினம் குறித்த வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த இந்த போலி அதிகாரி குறித்த கறுவாட்டை பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகவும், அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருப்பதற்கு இரண்டாயிரத்து 500 ரூபாவை தருமாறும் கேட்டுள்ளார். இதுதொடர்பாக சந்தேகம் ஏற்பட்ட கடை உரிமையாளர் குறித்த போலி அதிகாரியின் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அப்போது நுகர்வோர் அதிகார சபை எனக் குறிப்பிடப்பட்ட ஓர் அடையாள அட்டையைக் கொடுத்துள்ளார். அது போலியானது என புரிந்து கொண்ட கடை உரிமையாளர் உடனடியாக பொலிசாருக்கு அறிவித்து குறித்த சந்தேக நபரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
தன்னுடன் தினமும் பத்துப் பேர் வருவதாகவும் ஒரு வாகனத்தில் தம்மை அழைத்து வந்து இதுபோன்ற இடங்களில் இறக்கி விட்டுச் சென்று மீண்டும் மாலையில் அழைத்துச் செல்வதாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித் துள்ளார். குறித்த நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேக நபருடன் வருகை தரும் ஏனைய போலி அதிகாரிகளை கைது செய்வதற்கு வரக்காபொலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment