வடக்கில் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் எந்தவித மோசடிகளும் இல்லை – கோபாலசுவாமி!
வடக்கில் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் எவ்வித மோசடிகளும் இல்லாத வகையில் அனைத்து செயற்பாடுகளும் நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட்டதனை இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் என். கோபாலசுவாமி உறுதி செய்துள்ளார்.
அவை தவிர்ந்த வெளியிடங்களில் தேர்தல் வன்முறைகள் இடம் பெற்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும், தமக்கு அவை குறித்து எவ்வித நேரடி அனுபவங்களும் இல்லையெனவும் அவர் கூறினார். இதேவேளை, இலங்கைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்துள்ளார்.
வட மாகாணத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகளை முன்னெடுப்பதற்காக என். கோபாலசுவாமி தலைமையில் வருகை தந்திருந்த தெற்காசியாவின் தேர்தல் முகாமைத்துவ அமைப்பு தமது கண்காணிப்பு தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிக்கையினை நேற்று மாலை 7 மணியளவில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைத்தது. அதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்துகளை முன்வைத்தார்.
தேர்தலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் சீராகவும் நம்பிக்கைக்குரியதாகவும் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் தொடர்பில் சிறந்த அறிவுடைய அதிகாரிகள் வெகு சிறப்பாக தமக்குரிய கடமைகளை முன்னெடுத்திருந்தனர். அந்த வகையில், வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் எவ்வித மோசடிகளுமின்றி அனைத்து செயற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதை எம்மால் உறுதி செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.
இராணுவத்தினர் சிவில் உடைகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற போதிலும், அவை குறித்த எவ்வித அத்தாட்சிகளும் இல்லாத நிலையில் எம்மால் அதனை ஊர்ஜிதம் செய்ய இயலாதுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இடம் பெயர்ந்தோர் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வருவதற்கான வாகன வசதிகளை செய்து கொடுத்தமை மற்றும் எழுந்தமானமாக வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டமை ஆகிய தேர்தல்கள் ஆணையாளரின் செயற்பாடு களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலம் தேர்தல்களை மேலும் நீதியானதும் காத்திரமானதாகவும் முன்னெடுக்க முடியுமென தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் பெப்ரல், சி. எம். இ. வி. போன்ற அமைப்புகள் தமது பிரதிநிதிகளை ஒவ்வொரு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் நிறுத்தியிருந்த மையினால் அங்கு மோசடிகள் இடம்பெறுவதற்கு எவ்வித வாய்ப்பும் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment