"கருணாநிதியின் கைக்கூலியே நாட்டைவிட்டு வெளியேறு" - நீலகண்டணுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
இலங்கையை இந்தியா கைப்பற்றி தமிழ் மக்களின் தேவை களை நிறைவேற்றவேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் கருத்து தெரிவித்ததாகக் குற்றஞ் சாட்டி அவருக்கு எதிராக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்ட மொன்று நடத்தப்பட்டது.
தமிழ், சிங்கள மக்கள் அமைதியான சூழ்நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நிலையில், நீலகண்டனின் கருத்து நாட்டையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கந்தையா நீலகண்டனின் சட்ட நிறுவனத்துக்கு முன்பாக நேற்று முற்பகல் 11.30 முதல் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. "நீலகண்டன் தாய் நாட்டின் துரோகி", "கருணாநிதியின் கைக்கூலியே நாட்டைவிட்டு வெளியேறு", 'இலங்கை, இந்திய நட்புறவு சங்கத்தின் தலைவராக இருக்கும் தகுதியற்றவர், 'இந்து மாமன்றத்தின் தலைவராக இருக்கத் தகுதியற்றவர்' போன்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தக் கருத்து பாரதூரமானது. தமிழ் மக்களான எமக்கு இங்கு எதுவித குறைபாடும் இல்லை. ஏனைய இனங்களுடன் சுமுகமாகவே வாழ்ந்துவருகிறோம். இந்த நிலையில் தமிழ் மக்களின் அமைதியான வாழ்க்கையைக் குழப்பும் வகையிலான கருத்துத் தொடர்பில் கந்தையான நீலகண்டன் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும். ஜனாதிபதியிடமும், தமிழ் மக்களிடமும் அவர் மன்னிப்புக் கோரவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரமணன் என்பவர் கூறினார்.
கருணாநிதியின் கைக்கூலியாக செயற்படும் நீலகண்டன் முடிந்தால் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கு தனி ஈழத்தை அமைத்துக்கொள்ளட்டும் என நாம் சவால் விடுக்கின்றோம். தமிழகத்தில் கோடிக்கணக்கான தமிழர்கள் இருந்தாலும் அங்கு தனிஈழம் அமைக்க முடியாது. ஆனால், இலங்கையில் அதனை அமைக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் இங்குள்ள தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கவில்லை. அனைவரையும் சமமாகவே நடத்துகிறது. சிலர் தமது சொந்த அரசியல் இலாபத்துக்காக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் ஒற்றுமையாக இருக்கும் சூழ்நிலையைக் குழப்ப வேண்டாம் என தமிழ் மக்கள் என்ற ரீதியில் கோரிக்கை விடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ராஜ்குமார் என்பவர் கூறினார். நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமாதானத்தையும், ஒற்றுமையையும் குலைக்க வேண்டாம் எனத் தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையை இந்தியா கைப்பற்ற வேண்டுமென்ற கந்தையா நீலகண்டனின் கருத்தானது வேறு வேறு பிரச்சினைகள் உருவாவதற்கான ஆரம்பமாக அமைந்துவிடும். சட்டத்தரணி என்ற ரீதியில் நன்கு சட்டம் அறிந்த ஒருவர் இவ்வாறான கருத்தைக் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த சண்முகம் தர்மா என்பவர் கூறினார்.
இலங்கை இந்திய நட்புறவு சங்கத்தின் தலைவராகவும், இந்து மாமன்றத்தின் தலைவராகவும் இருக்கும் இவர் இவ்வாறான கருத்தைத் தெரிவித்தி ருப்பதானது பிழையானது என்றும் அவர் குறிப்பிட்டார். தனது கருத்துத் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கோராவிட்டால் இந்த ஆர்ப்பாட்டம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறினர்.
இலங்கை, இந்திய நட்புறவு சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான கந்தையா நீலகண்டன் நம்நாட்டு சிவில் சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசின் தலையீடு அவசியம் என்று கூறியதாக ஒரு ஆங்கிலத் தினசரி கடந்த 9ம் திகதி வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பில் நேற்று திரு. நீலகண்டனுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
இலங்கை, இந்திய நட்புறவு சங்கத்தின் வருடாந்த சந்திப்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற போதே இந்திய உயர் ஸ்தானிகர் வை. எஸ். சின்ஹா அவ்வைபவத்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அங்கு திரு. கந்தையா நீலகண்டன் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே நேற்று கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment