வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும்!
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரென பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது தேர்தலை இலக்காக கொண்டு முன்னெடுக் கப்பட்டதொன்றல்ல. அது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒரு பகுதி யாகவே நாம் கருதுகின்றோம். வட மாகாணத்தின் புதிய முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகம் அந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமென தான் நம்புவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மூன்று மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியானதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப் பட்டிருந்தது. இதன்போது அங்கு வருகை தந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளியாகியுள்ள வட மாகாண சபை தேர்தல் பெறுபேறுகள் வடக்கு மக்களின் தேவையை உணர்த்துமாகவிருந்தால் அதனையொரு பாடமாகக் கொண்டு அவற்றை சரி செய்ய முயற்சி எடுப்போம். அதேவேளை, வடக்கு மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கத்திடமுள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் எமக்கு சிறந்த சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொடுத்துள்தெனவும் அமைச்சர் கூறினார்.
வடக்கில் மக்கள் தமது வீடுகளிலிருந்து சுதந்திரமாக வெளியே சென்று வாக்களிக்க முடிந்துள்ளமைக்கு இராணுவத்தினரே காரணம். இராணுவத்தினரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்று மக்கள் சுதந்திரமாக தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட முடியாமல் போயிருக்குமென்பதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.
வடக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்பட்டுள்ளமையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். சர்வதேசம் குற்றம் சுமத்தி வந்த வடக்கு மக்களின் ஜனநாயகம் இன்று நேர்மையான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குரிய முழு கௌரவமும் ஜனாதிபதியவர்களுக்கும் முப்படையினருக்கும் மாத்திரமே உரியது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வட மாகாண சபையை பொறுப்பேற்கவுள்ள முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகத்திற்கு வடக்கு இளைஞர்களின் எதிர்காலம் குறித்து பாரிய பொறுப்பு உண்டு. அதிகாரத்தை பொறுப்பேற்றுக் கொள்வது மாத்திரம் வெற்றியல்ல. இலங்கையர்கள் என்ற உணர்வோடு நாட்டின் அபிவிருத்தி, ஐக்கியம், மக்களின் மகிழ்ச்சிக்காக இவர்கள் தமது வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டும். விக்கினேஸ்வரன் தெற்கிலிருந்தவர் ஆகையினால் அவர் அதனை சரியாக செய்வாரென எதிர்பார்க்கின்றோம்.
வடக்கிலுள்ள சிறுபான்மையினரான சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனத் தெரிவித்த அமைச்சர் மாகாண சபைக்குரிய பொலிஸ் காணி அதிகாரம் குறித்து கட்சிக்குள்ளேயே வேறு கருத்துக்கள் நிலவுவதால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் சுயாதீன குழு மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியன அது குறித்த தீர்மானத்தை முன்னெடுக்குமெனவும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment